ராஜன் குறை
சென்ற வாரம் பிரதமர் மோடி பீஹாரில் தேர்தல் பிரசார மேடையில் பேசும்போது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியளித்தார். அது என்னவென்றால், பீஹாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை தி.மு.க கட்சியினர் துன்புறுத்துகிறார்கள் என்ற கூற்றாகும். இப்படி ஒரு வடிகட்டிய பொய்யை, பழிச்சொல்லை ஒரு பிரதமரே கூறுவது தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
ஏனெனில் பல்வேறு ஊடகங்களில் பீஹாரிலிருந்து வந்து பணிசெய்யும் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அவர்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றைக் குறித்தும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவு குறித்தும் பல்வேறு பதிவுகளைச் செய்துள்ளார்கள். அனுபவரீதியாகவே பலரும் அதனை அறிவோம்.
உதாரணமாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய பீஹார் பெண்மணி கூறியது: அவர் குழந்தைக்கு ஒரு வயதாகியும் பேச வராமல் இருந்ததை அண்டை வீட்டு தமிழ்ப் பெண் கவனித்து அவரிடம் கேட்டுள்ளார். இவருக்கு அது ஏன் என்று தெரியவில்லை. தமிழ்ப்பெண் இவரிடம் குழந்தை விளையாடும் போது பொருட்களை அதன் அருகில் சத்தம் வரும்படி போடச் சொல்லியுள்ளார். குழந்தை சத்தம் கேட்டு திரும்புகிறதா என்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
அவர் அதே போல செய்து பார்த்தபோது, குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்பது புரிந்துள்ளது. மருத்துவரிடம் கொண்டு சென்ற போது அந்த குழந்தைக்கு உள்ள குறைபாட்டை அறுவை சிகிச்சை செய்துதான் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
பின்னர் இவரிடம் ரேஷன் கார்டு உள்ளதா என்று கேட்டுள்ளார். இல்லையென்று சொன்னதும், அதனை பெரும்படியும், அந்த அத்தாட்சியுடன் வந்தால் முதல்வரின் இலவச மருத்துவ திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதன்படியே இவர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துப் பெற்று, இலவசமாக சிகிச்சை செய்து குழந்தைக்கு கேட்கும், பேசும் திறன் வந்துள்ளது.
இந்த சம்பவத்தைக் கூறிய அந்தப் பெண்மணி தான் தமிழ்நாட்டில் இருந்ததால்தான் இந்த குறைபாட்டை புரிந்துகொண்டு அதற்கு இலவசமாக சிகிச்சையும் செய்ய முடிந்தது என்று தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அந்த ஊடக விவாதத்தில் பேசியுள்ளார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.

பள்ளிகளில் இலவச மதிய உணவு, தரமான கல்வி கிடைப்பதை, இப்போது திராவிட மாடல் ஆட்சியில் காலை உணவும் கிடைப்பதை பலரும் குறிப்பிடுகிறார்கள். சென்ற வாரம் தமிழ் மொழிப்பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்ற பீஹாரைச் சேர்ந்த பெண், தன் கல்விக்காகவே பெற்றோர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்வதாகக் கூறியுள்ளார். அவர் தந்தை வெல்டராக பணி செய்கிறார்.
உண்மை நிலை இப்படியிருக்கும்போது, தி.மு.க கட்சியினர் பீஹாரிலிருந்து வந்த தொழிலாளர்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் சொல்வது எவ்வளவு பெரிய அபாண்டம்? அவர் பேசுவது நாடு முழுவதும் கவனிக்கப்படும் என்பது அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டில் அவரைக் கேள்வி கேட்பார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் ஏன் அப்படிப் பேசுகிறார்?
பாசிச மனோபாவத்தின் அடிப்படைகளில் ஒன்று பொய்யை தொடர்ந்து பேசி அதனை உண்மையாக்குவது. ஹிட்லரின் அமைச்சரான கோயபல்ஸ் என்பவரை அதற்கான இலக்கணமாகச் சொல்வார்கள். இப்போது வட இந்திய ஊடகங்கள் எல்லாம் முழு மூச்சாக அதனைச் செய்கின்றன.
பிரதமர் இப்படி பேசியதும் வட நாட்டு ஊடகங்கள் தி.மு.க அமைச்சர்கள் வெவ்வேறு தருணங்களில் வடநாட்டின் நிலை, இந்தி மொழி பயிற்சி குறித்தெல்லாம் கூறியவற்றை அவர்கள் முழுமையான பேச்சிலிருந்து துண்டு, துண்டாக வெட்டியெடுத்து வெறுப்புப் பிரசாரம் போன்று சித்தரித்து வருகின்றன. உதாரணமாக இந்தி மொழி படிக்கச் சொல்லி வற்புறுத்துவதற்கு எதிராக அந்த மொழியைப் படித்தால் பானிபூரி விற்கத்தான் உதவும் என்று கேலியாகச் சொல்வதை வெறுப்பரசியலாகச் சித்திரிப்பது அவர்கள் உத்தி.
வேறு, வேறு சந்தர்ப்பங்களில் கூறியவற்றை அப்படி பயன்படுத்தினால்கூட, பீஹார் மாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப் பட்டார்கள் என்பதற்கு அவை ஆதாரம் ஆகாது அல்லவா? அதனால் ஒருமுறை பீஹாரைச் சேர்ந்த பாஜக கட்சி நபரை வைத்து தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினார்கள். அவரது சதிச்செயல் கண்டறியப்பட்டு அவர் கோர்ட்டில் மன்னிப்புக் கேட்டார். இப்போதும் அந்த வதந்திகளால் ஏற்பட்ட பரபரப்பை உண்மை நிகழ்ச்சி போல சித்தரிக்க பாஜக பேச்சாளர்கள் முயல்கிறார்கள். அவ்வளவு வன்மம் நிறைந்த அரசியல் அவர்களுடையது. சமூகத்தில் பிளவுகளைத் தூண்டாமல் அவர்களால் அரசியல் செய்யவே முடியாது.
ஆனால் இதையெல்லாம் கடந்து, இந்த கோயபல்ஸ் பிரசாரங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்க முடியுமா என்பதையும் நாம் பரிசீலிக்கத்தான் வேண்டும். அப்போது இரண்டு காரணங்களைக் கூறத் தோன்றுகிறது. ஒன்று மாநில கட்சிகளின் ஒற்றுமையை, இந்தியா கூட்டணியின் ஒற்றுமையைக் குலைப்பது. இது மிகவும் தெளிவானது.
இரண்டு, புலம்பெயர் வடநாட்டு தொழிலாளர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாக க் கூறி, போலி வாக்குகளை ஏற்படுத்தும் சாத்தியங்களை முயற்சிப்பதாக இருக்கலாம் என்று சிலர் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி கர்நாடகாவில் எப்படி முன்னூறு பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக வாக்காளர் பட்டியல் கூறுகிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.
அவசரமாக தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதை தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்ட த்தில் பங்கேற்ற கட்சிகள் கண்டித்துள்ளன. அவ்வாறு அவசரமாக உருவாகும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வட இந்திய பெயர்கள் குறித்து வாக்குச்சாவடி முகவர்கள் கேள்வி எழுப்பிலாம்.
அப்படி பிரச்சினை எழுந்தால் தி.மு.க பீஹார் மாநில தொழிலாளர்களை வெறுக்கிறது என்ற கதையாடலைப் பயன்படுத்தி அதனை முறியடிக்கலாம் என்ற நோக்கம் இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதாக பலர் கூறுகின்றனர். இந்த சாத்தியம் ஒருபுறம் இருக்கலாமென்றாலும், நாம் மாநில கட்சிகளின் ஒற்றுமையை ஏன் பாஜக விரும்பாது என்பதை முதலில் ஆராய்வது அவசியம்.

மாநிலக் கட்சிகளின் ஒற்றுமை
பாரதீய ஜனதா கட்சி ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவித்து அதனை ஒற்றை தேசிய அரசாக மாற்றும் நோக்கம் கொண்டது. அதனால்தான் அவர்கள் “ஓன்றியம்” என்ற வார்த்தையினையே வெறுப்பதைக் காணலாம். இந்திய ஒன்றியம் என்ற பெயரே அவர்களுக்குப் பிடிக்காது. அவர்கள் கருத்தியலில் பாரதம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக ஒன்றுபட்ட தேசம். ஆரிய சமஸ்கிருத பண்பாட்டினால், இந்து மதத்தால் ஒருங்கிணைக்கபட்ட தேசம். அதனால்` மாநில மக்களுக்கு தனித்த அடையாளம் கூடாது; மாநில அரசுகளுக்கு எந்த சுயாட்சி உரிமையும் கூடாது.
மாநிலக் கட்சிகளால் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்பதால், காங்கிரஸ் பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளாக உருமாறி விட்டதால், பாரதீய ஜனதா கட்சி தான் மட்டுமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும் என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்கி, பெருமுதலீட்டிய ஆதரவுடன் அதனை செயல்படுத்த முடிகிறது. அதற்கு எதிராக காங்கிரசும், மாநில கட்சிகளும் இந்தியா கூட்டணி அமைப்பது, வெற்றி பெற்றால் ஒன்றிய அரசில் கூட்டணி ஆட்சி அமைப்பது என்பது அவர்கள் வேலைத்திட்ட த்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.
இந்த பின்னணியில்தான் ஓட்டுத் திருட்டிற்கு எதிரான பீஹார் பேரணிக்கு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்ட நிகழ்வைக் காண வேண்டும். அது பாஜக-விற்கு கடும் அதிருப்தியை உருவாக்கியதை எளிதில் காணலாம். தி.மு.க தலைவர் ஸ்டாலின் பீஹாருக்குச் சென்று ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் இணைந்து பேசியது, அவருக்குக் கிடைத்த வரவேற்பும் அவர்களுக்கு ஆபத்தான அறிகுறிகள்.
பீஹார் பேரணியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழில் பேசியதும், அதனை சிறப்பாக இந்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் அலிம் அல் புஹாரி மொழியாக்கம் செய்ததும், அந்த உரைக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பும், மாநில அணிசேர்க்கையின் சாத்தியத்திற்கு கட்டியம் கூறுபவை. இப்படி இந்தியா கூட்டணி வலுவடைந்தால் அது பாஜக-விற்குப் பெரிய சவால்.

திராவிட சிந்தனை பரவிவிடும் என்ற அச்சம்
இந்தியா கூட்டணி வலுவடைவதைத் தாண்டி இன்னொரு சாத்தியமும் பாஜக-விற்கு அச்சத்தை உருவாக்கும். அது என்னவென்றால், பீஹார், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் நலன்களுக்கான அரசியல்தான் முக்கியமாகச் செயல்படுகிறது. அதனால் பாஜக அதில் விடுபட்ட தொகுதிகளை தனக்கு ஆதரவாக ஒருங்கிணைத்துக் கொள்ள முடிகிறது. முஸ்லீம்களை எதிரிகளாகக் காட்டி அனைவரையும் இந்து என்று ஒருங்கிணைக்க முடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் பிற்படுத்தப் பட்டோர் நலன் கள் சார்ந்த அரசியல் பார்ப்பனீய விமர்சனத்துடன், வர்ண தர்ம சிந்தனை மறுப்புடன் இரண்டறக் கலந்துவிட்டது. பெரியார் சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கருத்தாக்கங்கள் மூலம் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகளைக் கடந்து, அனைவரையும் கருத்தியல் ரீதியாக ஒன்றுபடுத்தும் அரசியல் தளத்தை உருவாக்கிவிட்டார். வர்ண தர்ம பாப்பனீய சிந்தனையை ஆரிய பண்பாடு என்று கருதுவதால் அதற்கு மாற்றானதாக திராவிட பண்பாடு என்ற கருத்தாக்கத்தை திராவிட இயக்கம் முன் நிறுத்தியது.
இதனை எதிர்கொள்ள முடியாத ஆரிய சக்திகள், ஆளுனர் ரவி உட்பட, ஆரியம்-திராவிடம் என்று பிரித்துப் பேசுவது கூடாது, அது காலனீய ஆதிக்கம் உருவாக்கிய பிரிவினை, இனவாதம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆரியர்கள் தனி இனம், திராவிடர்கள் தனி இனம் என்றெல்லாம் திராவிட இயக்கம் அரசியல் செய்யவில்லை. மாறாக ஆரிய பண்பாடு வர்ண தர்மத்தை வலியுறுத்துகிறது, திராவிட பண்பாடு அதனை ஏற்க மறுக்கிறது என்ற அளவில்தான் அரசியலை முன்னெடுத்தார்கள்.
இந்த கருத்தியல் சிந்தனை வட மாநிலங்களில் பரவினால், அங்கேயுள்ள மாநில கட்சிகளும் இந்த கருத்தியல் அடிப்படையை உருவாக்கினால் அங்கேயும் பாஜக கட்சியால் அரசியல் செய்ய முடியாது போய்விடும். ஆர்.எஸ்.எஸ் அரசியலின் ஆணிவேரே பாப்பனீய வர்ண தர்ம சிந்தனைதான் என்பதால் அவர்களுக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டு விடும்.
ஏற்கனவே அம்பேத்கர், கன்ஷிராம் உட்பட பல தலைவர்கள் மனுவாத சிந்தனையை எதிர்த்துப் பேசியுள்ளார்கள். ஆனால் அங்கேயுள்ள தேர்தல் அரசியலில், ஆதிக்க ஜாதியினர் ஆதரவைப் பெறுவதற்காக அந்த விமர்சனங்களுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காத போக்கும் நிலவுகிறது. அதனால் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் அணிசேர்கைக்கு இப்படி ஒரு வர்ண தர்ம மறுப்பு கோட்பாட்டு அடிப்படை திராவிட இயக்கத்திலிருந்து பரவி வலுசேர்ப்பதை பாஜக விரும்பாது என்பது இயற்கை.
அதனால்தான் தமிழ்நாட்டு பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தி.மு.க தலைவர் பீஹார் சென்றால் கடும் எதிர்ப்பினை சந்திப்பார். ஏனெனில் அங்குள்ள மக்கள் சனாதன தர்மத்தை ஏற்பவர்கள் என்று கூறுகிறார். சனாதன தர்மம் என்றால் இந்து மதம் என்று வட நாட்டில் பரப்பியுள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இறை நம்பிக்கை வழிபாடு வேறு, வர்ண தர்ம பாகுபாடு என்ற சனாதன தர்மம் வேறு என்ற தெளிவு வேரூன்றியுள்ளது.

தாய்மொழிக் கல்வி
தமிழ்நாட்டிலிருந்து பீஹார் பெறக்கூடாத மற்றொரு சிந்தனையும் இருக்கிறது. அதுதான் இருமொழிக் கொள்கை. தமிழ்நாட்டில் அடிப்படைக் கல்விக்கு தமிழ் மொழியும், தொடர்பு மொழியாக ஆங்கிலமும் கற்றால் போதும் என்ற கொள்கை நிலைபெற்றுள்ளது. விரும்புபவர்கள் தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியும் பயில்கிறார்கள்.
ஆனால் பீஹாரின் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் பெருவாரியான மக்களின் தாய்மொழியான போஜ்பூரி, மைதிலி ஆகிய மொழிகளில் கல்வி வழங்கப்படுவதில்லை. இந்தி வழிக்கல்விதான் வழங்கப்படுகிறது. மாநில, ஒன்றிய அரசு மொழியாக, ஊடக த் தொடர்பு மொழியாக இந்தி இருப்பதால், இந்தி மொழிதான் பள்ளிகளில் பயிற்று மொழியாக இருக்கிறது.
இப்போது புதிய தேசியக் கல்விக்கொள்கையில் தாய்மொழியில் கல்வி கற்பிப்பது அவசியம் என்று கூறப்பட்டாலும் போஜ்பூரி மொழியிலோ, மைதிலி மொழியிலோ பாட த்திட்டங்கள், பாட நூல்கள் இன்னம் உருவாகவில்லை. அப்படி உருவாக்கப்பட்டாலும், இந்தி மொழியே அரசு அலுவல் மொழி என்பதால் மாணவர்கள் போஜ்பூரி, மைதிலி தாய்மொழியை பயிற்றுமொழியாகக் கொள்ளும் கல்வியை விரும்பி ஏற்பார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் அந்த மொழிகளுக்கு அலுவலகத்தில், பொதுமன்றத்தில் பயன் இருக்காது என்றால் அதில் பயின்று என்ன பயன்?
வளர்ச்சிக் குறியீடுகளில் பீஹாரின் பின் தங்கிய நிலைக்கு எந்த அளவு தாய்மொழிக் கல்வி வழங்கப் படாதது காரணம் என்பது ஆய்வுக்குரியது. இவ்வாறு இந்தி மொழியே பயிற்று மொழியாக இருப்பதனால் பொதுவான மாநில உணர்வு என்பதும் அங்கே உருவாவதில் சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டிலும் பல்வேறு ஜாதிச் சமூகங்கள் இரு நூற்றாண்டுகளாகவே சங்கங்கள் அமைத்து செயல்பட்டு வந்தாலும். அந்தந்த சமூகத்தினர் நலன்களை முன்னெடுத்து வந்தாலும், பொதுவான ஜாதி மறுப்புச் சிந்தனை, சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவற்றின் மூலம் சமூக நீதி என்ற பொது உணர்வு உருவாகியுள்ளது. அதனை வலுப்படுத்த தமிழ் மொழி அடையாளம் என்பதும், திராவிட பண்பாட்டு அடையாளம் என்பது பொது அடையாளங்களாக விளங்குவதால் ஜாதிப் பிரிவுகள் கடந்த சமூக ஒத்திசைவும், ஜாதி கடந்த அரசியல் முரண்களமும் சாத்தியமாகிறது.
இவ்வாறான கருத்தியல்கள் உருவாகாத மாநிலங்களில் இந்து-இந்தி-இந்தியா என்ற கருத்தாக்க க் கலவையை சிறுபான்மை மக்களுக்கு எதிராக உருவாக்கிவிட முடிகிறது. அதனை பயன்படுத்தி மீட்புவாத நோக்கையும், பிற்போக்கு சிந்தனைகளையும் வலுப்படுத்த முடிகிறது.
அதனால்தான் தி.மு.க கட்சியினர் பீஹார் தொழிலாளர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லி அவர்களை தமிழ்நாட்டின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் தேவை ஏற்படுகிறது. திராவிட முற்போக்கு சிந்தனை வட நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக-வால் அனுமதிக்க முடியாது என்பது புரிந்துகொள்ளக்கூடியது. அதனால்தான் பிரதமர் கூச்சமின்றி ஆதாரமற்ற செய்தியைப் பேசுகிறார்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
