ADVERTISEMENT

இந்துத்துவப் பருப்பு தமிழ்நாட்டில் ஏன் வேகவில்லை?

Published On:

| By Minnambalam Desk

இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட அதிகக் கோயில்களைக் கொண்ட தமிழ்நாடு, ஒற்றை மதத்தின் மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கிறது. இதற்கான காரணம் பண்டைத் தமிழரின் வாழ்வியல் தத்துவத்திலும் தமிழகத்தின் சுயமரியாதை மரபிலும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

ஏ.எஸ். பன்னீர்செல்வன்

ADVERTISEMENT

இரண்டு நேரெதிரான கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கங்கள் பிறந்த ஆண்டு என்பதால் 1925ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரியார் ஈ.வெ. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார். அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில், விநாயக தாமோதர் சாவர்க்கரின் உணர்வுபூர்வமான இந்து மேலாதிக்கக் கருத்துக்களால் உத்வேகம் பெற்ற கேசவ பலிராம் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.

1992, டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதுமே மதரீதியான வலதுசாரிச் சாய்வுக்கு நகர்ந்துள்ளபோதிலும், மத அடையாளம் என்று வரும்போது தேசியப் போக்கைப் பிரதிபலிக்காமல் தமிழ்நாடு ஏன் அதற்கு நேரெதிரான அரசியல் பாதையைப் பின்பற்றுகிறது என்பதற்கான வரலாற்றுப் பின்னணியை வழங்குவதற்காகவே இந்த ஒப்பீடு.

ADVERTISEMENT

நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி 2014, 2019, 2024 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களில் தமிழகத்தில் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? இதற்கு மாறாக, ஏ.பி. வாஜ்பாயிக்கு 1998, 1999 ஆகிய இரண்டு தேர்தல்களில் கிடைத்த எச்சரிக்கையோடு கூடிய ஆதரவை எவ்வாறு புரிந்துகொள்வது? இதைப் புரிந்துகொள்ள வரலாற்றுப் பார்வை தேவை.

தமிழ்நாடும் மற்ற மாநிலங்களைப் போலவே, பிளவுகளையும் பிற்போக்குத் தன்மைகளையும் கொண்டுள்ளது. அதே சமயம், நூற்றாண்டு காணும் சுயமரியாதை மரபு, தமிழ்நாட்டின் சமூகக் கட்டமைப்பாக அமைந்துள்ள துடிப்பான பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தேவையான சமூக, அரசியல் மன உறுதியை இந்த மாநிலத்திற்குக் கொடுக்கிறது. பல்வேறு பின்புலங்களிலிருந்து வரும் மக்கள் மத்தியில் பன்மைத்துவ ஒப்பந்தத்தின் தேவையை இது அங்கீகரிக்கிறது.

ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படையான பண்புகளையும் அதன்மீது எவ்வாறு காலனித்துவ எதிர்ப்பு, தேசியவாதம் ஆகிய அடையாளங்கள் ஏற்றப்பட்டன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் வெறுத்த தேசியவாதத்தின் திரிபடைந்த வடிவம், தாராளமயமாக்கப்பட்ட இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தின் ஒப்புதலை எவ்வாறு பெற்றது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தில் தாராளமயமான கண்ணோட்டத்தை மேற்கொண்ட அதே காலகட்டத்தில், சமூக அளவிலும் மதரீதியாகவும் குறுகிய பார்வை செல்வாக்குப் பெறத் தொடங்கியது.

ஒன்றுசேர்த்தலும் ஒன்றாக இணைதலும்

இந்தியாவைப் பற்றிய ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் பார்வை, ஒரு விதத்தில், நவீன அரசின் “ஒன்றுசேர்த்து வைத்தல்” (Holding Together) என்னும் மாதிரியைக் குறிக்கிறது. இத்தகைய சமூக அமைப்பில், ஆயுதப்படைகள் போற்றப்பட வேண்டும், அதிகாரத்தைக் குவிப்பது இயற்கையான அரசியல் பாதையாகப் பார்க்கப்பட வேண்டும், ஒற்றைப்படைத்தன்மை கொண்ட சமூகம் குறித்த கற்பனை, அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் சக்தியாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், சுயமரியாதை இயக்கத்தின் பாதை “ஒன்றாக இணைதல்” (Coming Together) என்னும் செயல்முறையைக் கொண்டது. இந்த மாதிரியில், செயல்பாடும் அதிகாரமும் அரசு இயந்திரத்திடம் இல்லாமல் மக்களிடமே உள்ளது. மக்களின் பன்முக அபிலாஷைகளுக்குப் போதுமான ஜனநாயக இடம் வழங்கப்படுகிறது; அவை கிளர்ச்சியாகவோ அச்சுறுத்தலாகவோ பார்க்கப்படுவதில்லை. மொழியுரிமை, மலிவு விலையில் தரமான கல்வி, பொது சுகாதார உள்கட்டமைப்புக்கான கோரிக்கை, பாலின நீதி, சமூக நீதியை உருவாக்கும் பல்வேறு கூறுகள் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களின் உரிமைகளை முறையான வழியில் நிறைவேற்றுவதாகவே பார்க்கப்படுகின்றன.

சமூக நீதி: தமிழ்நாட்டின் எட்டு அம்சத் திட்டம்

தமிழ்நாடு சமூக நீதியை இடஒதுக்கீடு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்கவில்லை. நலவாழ்வையும் விரைவான வளர்ச்சியையும் இணைப்பதற்கான தமிழகத்துச் சமூக நீதியின் பாதையில் எட்டுக் கூறுகள் உள்ளன:

  1. கல்வி: மக்களுக்குக் கல்வி கிடைக்கச்செய்தல்.
  2. இடைவெளி குறைத்தல்: நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களுக்கு இடையிலான தர இடைவெளியைக் குறைத்தல்.
  3. மக்கள்தொகை: கட்டாய முறைகள் மூலம் அல்லாமல், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மூலம் கருவுறும் விகிதத்தைக் கட்டுப்படுத்துதல்.
  4. மகப்பேறு நலன்கள்: சமகாலத் தேவைகளுக்கு ஏற்ற மகப்பேறு நலன்கள்.
  5. பணியிடத்தில் பெண்கள்: இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இது தமிழக அரசு தரும் தரவு அல்ல. மத்திய அரசின் தொழில்துறைக்கான ஆண்டு ஆய்வுக் கணக்கிலிருந்து பெறப்பட்ட தரவு.
  6. நடமாடும் சுதந்திரம்: போக்குவரத்து வசதியில் முதலீடு செய்வதன் மூலமும், பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதிகளை வழங்குவதன் மூலமும் அவர்களது நடமாடும் சுதந்திரம் அதிகரிப்பு.
  7. திறன் மேம்பாடு: ‘நான் முதல்வன்’, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் மக்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு கொண்டிருக்கும் வலுவான அர்ப்பணிப்பால், திறன் மேம்பாட்டில் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.
  8. நலப்பணிகள்: மக்கள் நலப்பணிகள் சார்ந்த செலவினத்தை, அதிகாரமளித்தலை ‘இலவசங்கள்’ என்று குறைத்து மதிப்பிடும் நவீன தாராளவாதக் கருத்தியலில் சிக்காமல், ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான மகத்தான முதலீடாக இவற்றைப் புரிந்துகொள்ளும் மாநிலம் தமிழ்நாடு. 

இந்தக் கூறுகளே ஆர்.எஸ்.எஸ்.ஸையும் அதன் சிறுபான்மையினர் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் தமிழ்நாடு எதிர்கொண்டு கட்டுப்படுத்துவதற்கான விரிவான பின்புலம் ஆகும்.

அகம்புறம்: தமிழர்களின் தனித்துவமான நம்பிக்கை

ஆர்.எஸ்.எஸ்.ஸைக் கட்டுப்படுத்துவது என்றால் தமிழ்நாட்டில் இந்து மேலாதிக்கவாதிகளே இல்லை என்று அர்த்தமல்ல. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வலிமையான இந்து வலதுசாரிப் போக்கு தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் இருந்தது. சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம் (1923), வைக்கம் சத்தியாகிரகம் (1924-25) போன்ற முக்கியமான போராட்டங்கள், தமிழ்நாட்டிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் நிலப்பிரபுத்துவச் சக்திகளும் சாதி மேலாதிக்கச் சக்திகளும் இருந்ததைத் தெளிவாக்குகின்றன. ஆனால், பிற்போக்குத்தனத்திற்கும் பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடுவதற்கான கருவிகளைப் பெரியார் வழங்கினார்.

இந்தியாவின் மற்ற பல பகுதிகளைப் போலல்லாமல், தமிழ்நாட்டின் பழமைவாதத்திற்கென்று பிரத்யேக இயக்கம் எதுவும் இல்லை (அதாவது ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, ஜனசங்கம், பாஜக போன்றவை). மாறாக, பழமைவாதச் சிந்தனை காங்கிரஸுடன் பிணைந்திருந்தது. வட மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸுக்கும் தமிழ்நாட்டுக் காங்கிரஸுக்கும் இடையே உள்ள குணாம்ச வேறுபாடு மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குள் பழமைவாத/பிற்போக்குவாதப் போக்கிற்கும் முற்போக்கான/அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கும் இடையிலான மோதல்களை வரையறுக்க ஒரு புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டில் வலுவான மத நம்பிக்கை இருந்தபோதிலும், இங்குள்ள மக்களுக்கு அகம், புறம் என்ற ஆழமான உணர்வு இருப்பதை இந்துத்துவத் தலைவர்கள் காலப்போக்கில் உணர்ந்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியக் காலத்திலிருந்தே ஒருங்கிணைந்த இந்த வகைப்பாட்டில், மத நம்பிக்கையானது காதலைப் போல, அகம் சார்ந்த அல்லது தனிப்பட்ட விவகாரம் ஆகும்; அதை அரசியல்மயமாக்குவது அவர்களின் அக உலகின் மீதான அத்துமீறல்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் முதல் முன்னணி அமைப்பாகத் தமிழ்நாட்டில் கால் பதிக்க முயன்ற அமைப்பு இந்து முன்னணி. அதன் தலைவராக இருந்தவர் 1957இல் காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாணுலிங்க நாடார். திராவிடக் கட்சிகளான திமுக அல்லது அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும்போது மட்டுமே இந்துத்துவ இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தில் மிகச் சிறிய பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்தது.

ஒற்றைத் தெய்வ அரசியல் தோல்வி

ஆர்.எஸ்.எஸ். கற்றுக்கொண்ட மிகக் கடினமான பாடம் என்னவென்றால், அகில இந்திய அளவில் அவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறை, பெரும்பாலான தமிழர்களை வட்டத்திற்குள் ஈர்க்கத் தவறிவிட்டது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம் பல மாநிலங்களில் வரவேற்பைப் பெற்றபோது, தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இங்குள்ள மக்கள் சிவன், விஷ்ணு ஆகியோருடன் பல்வேறு அம்மன்களை வழிபடுபவர்கள். இராமன் அவர்களுடைய முக்கியமான தெய்வங்களில் ஒருவர் அல்ல. 

அகில இந்திய ஒற்றைச் சின்ன அணிதிரட்டல் பலனளிக்காதபோது, அவர்கள் விநாயகர் (பிள்ளையார்) மீது தங்கள் கவனத்தைத் திருப்பினர். விளையாட்டுத்தனத்துடனும் உடனடியாக வரம் அளிக்கும் கருணையுடனும் அறியப்படும் பிள்ளையாரை அரசியல் கருவியாக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

அடுத்து, அவர்கள் தமிழ்க் கடவுளாகப் பரவலாக அறியப்படும் முருகனை நோக்கி நகர்ந்தனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உட்பட ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் குழுக்கள், முருகனை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்த முயன்றனர். பெரும் நிதியுதவியுடனும் தூண்டுதல்கள் மூலமும் இந்துக்களை அணிதிரட்ட முயன்றாலும் அந்த முயற்சி மதக் கலவரமாக எரிய மறுத்தது.

மண்டைக்காடு இந்து-கிறிஸ்துவக் கலவரங்கள், மீனாட்சிபுரத்தில் தலித்துகள் மதம் மாறியதைத் தொடர்ந்த முஸ்லிம்-எதிர்ப்பு அணிதிரட்டல்கள் ஆகியவை இருந்தபோதிலும் தமிழ்நாடு ஒற்றை மதத்தின் மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கிறது. இத்தனைக்கும் இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட அதிகக் கோயில்களைக் கொண்டிருக்கும் மாநிலம் இது. ஒற்றை மதத்தின் மேலாதிக்கம் என்பது உண்மையில் சிறுபான்மையினரின் மீதான வெறுப்பு என்பதைத் தமிழ்நாடு அறிந்திருக்கிறது. இந்த உணர்வே ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அணைபோடுவதற்கான அடிப்படையாக உள்ளது.

ஏ.எஸ். பன்னீர்செல்வன், சென்னை இதழியல் கல்வி நிலையத்தின் இயக்குநர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

நன்றி: தி அவுட்லுக் இந்தியா இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share