ராஜன் குறை
சென்ற வாரம் பட்டியல் ஜாதியினரிடையே உள் ஒதுக்கீடு தொடர்பாக வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சில அம்சங்கள் விவாதங்களை உருவாக்கியுள்ளன. தனிநபர் வருமானத்தின், சொத்தின் அடிப்படையில் சிலரை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கும் கிரீமி லேயர் முறையை, பட்டியல் ஜாதியினருக்கும் நீடிக்கலாம் என்ற சில நீதிபதிகளின் பரிந்துரையை அனைவரும் ஒருமனதாக எதிர்த்துள்ளனர்.
சில பட்டியல் ஜாதிகளுக்கு அதிகம் பின்தங்கியவை என்ற அளவில் உள் ஒதுக்கீடு செய்வது, அல்லது பட்டியல் ஜாதிகளுக்குள் உள் வகைமைகளை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டினை பிரித்தளிப்பது ஆகியவை குறித்தும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக இவ்வாறாக செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருப்பதைக் குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. இது, தலித் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றாக அணி திரள்வதை பாதிக்கும் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினையில் நம் கருத்தினை தொகுத்துக்கொள்ள மானுட வரலாற்றுப் பின்னணியை பருந்துப்பார்வையாகப் பார்ப்பது அவசியம் என்று தோன்றுகிறது. இந்தக் கட்டுரை அதற்கான முயற்சிதான்.
ஏற்றத்தாழ்வின் நீண்ட கால வரலாறு
மானுடத்தின் பயணத்தில் லட்சியங்களுக்கும், சமூக ஒழுங்கமைப்புகளுக்கும் முரண்பாடுகள் பல தோன்றியவண்ணமேதான் உள்ளன. தொடக்கக் கால சமூகங்களில் பல்வேறு இனக்குழுக்களில் தலைவனிடம் அதிகாரம் குவியத் தொடங்கியது. பின்னர் அரசன், நிலப்பிரபுக்கள், மத குருமார்கள் ஆகியோரிடம் அதிகாரம் குவிந்திருக்க ஏனைய உழைக்கும் மக்கள் அடிமைகளாகவோ அல்லது அடங்கி நடப்பவர்களாகவோ இருந்தனர்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு பிரமிடு போன்ற சமூக ஒழுங்கு உருவாகியது. அதிகார அமைப்பில் உச்சத்தில் இருப்பவர்கள் குறைவானவர்களாகவும், இடைநிலையில் அதிகமாகவும், அடித்தட்டில் மேலும் அதிகமாகவும் சமூக அமைப்புகள் உருவாயின. இந்தியாவிலோ இந்த அமைப்பு நால்வர்ண சமூகமாக, அதற்கு வெளியே அவர்ணர்களை நிறுத்தும் சமூகமாக உருவானது. பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு உருவாக்கப்பட்டது; அது ஆன்மா, புண்ணியம், பாவம், மறுபிறப்பு என்று இறை நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டு வர்ண, ஜாதி சமூகம் கட்டமைக்கப்பட்டது.
அதே சமயம் லட்சியங்களாக சமத்துவ நோக்கும், சம நீதி சிந்தனையும், அதிகாரப் பரவலாக்க நோக்கும் எல்லா காலங்களிலும் நிலவத்தான் செய்தன. ஆனால், லட்சியங்களை நடைமுறைப்படுத்துவதில் எப்போதும் சிக்கல்தான் நிலவியது. ஏராளமான புரட்சிகளும், போராட்டங்களும் நிகழத்தான் செய்தன. மதங்களுக்கு உள்ளும், வெளியிலும் மாற்றங்களை போதித்த மகான்கள் தோன்றினர். ஆனால், ஏதோவொரு வகையில் படிநிலை சமூக அமைப்பு, பிரமிட் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வு மீண்டும், மீண்டும் உருவானது.
அதிகாரப் பரவலாக்கம் பலவகையில் முயற்சி செய்யப்பட்டது. மன்னரிடமிருந்து நீதிபரிபாலனத்தைப் பிரிப்பது, மத நிறுவனங்களைத் தனித்து இயங்க அனுமதிப்பது, அரசருக்கு ஆலோசனை கூறும் சிற்றரசர்கள் அல்லது நிலப்பிரபுக்கள் அவைக்கு முடிவெடுக்கும் அதிகாரங்களை அளிப்பது என்றெல்லாம் பல முயற்சிகள் நடந்தன. ஆனால், மன்னர்களுக்கு இடையிலான போர்கள் மீண்டும், மீண்டும் ராணுவத்தை அதிகாரத்தின் மையமாக்கின. இன்றும் இதே பிரச்சினைகள் வேறு வடிவில் தொடரத்தான் செய்கின்றன.
முதலீட்டியமும், மானுடவாத சிந்தனைகளும்
பதினைந்தாம் நூற்றாண்டில் முதலீட்டிய திரட்சி அதிகரித்து, வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியபோது பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. அந்த நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க கண்டங்கள் கண்டறியப்பட்டதும், இந்தியாவுக்குக் கடல்வழி காணப்பட்டதும் உற்பத்தி, வர்த்தகச் சுழற்சியை அதிகரித்தன. முதலீட்டிய திரட்சியும் வேகமாக அதிகரித்தது. அச்சு இயந்திரங்கள் பெருகியதில் சிந்தனைப் பரவலும் வேகமாக அதிகரித்தது. இவற்றின் விளைவால் மானுடவாதம், வரலாற்றுவாதம் போன்ற சிந்தனைகள் அதிகரித்தன. சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்தும் குடியரசு, மக்களாட்சியைச் சிந்திக்கும் அதிகாரப் பரவலாக்க முயற்சிகள் வேகமெடுத்தன.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் என்ற மன்னரற்ற கூட்டாட்சி குடியரசின் பிரகடனமும், பிரெஞ்சுப் புரட்சி செய்த அனைவருக்குமான மனித உரிமை பிரகடனமும் மானுட வரலாற்றின் புதிய மைல்கற்களாயின. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மானுட லட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அரசனிடம் குவிந்திருந்த இறையாண்மை வடிவ அதிகாரம் இரண்டு வகையான அதிகாரப் பரவலுக்கு ஆட்பட்டது, குத்துக்கோடாக மக்கள் பிரதிநிதிகள் சட்டமியற்றி ஆள்வது (Legislature), அதிகாரிகள் சட்டப்படி நிர்வகிப்பது (Executive), வழக்காடு மன்றங்கள் நீதிபரிபாலனம் செய்வது (Judiciary) என்று பிரிக்கப்பட்டது. கிடைக்கோடாக உள்ளூராட்சி, மாநில ஆட்சி, ஒன்றிய ஆட்சி என்று மூன்று தளங்களாகப் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
வர்க்க முரணை எப்படித் தீர்ப்பது?
பதினெட்டாம் நூற்றாண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயந்திரங்களின் பயன்பாடு தோன்றியதில் தொழிற்சாலைகளும், பெருமளவிலான பண்டங்களின் உற்பத்தியும் சாத்தியமாயின. எரிபொருள் பயன்பாட்டில் என்ஜீனால் இயக்கப்பட்ட புதிய போக்குவரத்து வசதிகள் பெருகி பண்டங்களின் தொலைதூர பரிமாற்றத்தைத் துரிதப்படுத்தின. இந்த தொழிற்புரட்சியின் விளைவாக, புதிய உழைக்கும் வர்க்கம் தொழில் நகரங்களில் உருவானது. தொழிற்சாலை முதலாளிகள் பெருமளவில் தங்கள் முதலீட்டினைப் பெருக்கி புதிய ஆளும் வர்க்கமாயினர். உழைக்கும் வர்க்கமான தொழிலாளிகளோ, குறைந்த ஊதியத்திற்குப் பெரும் பணிச்சுமையை ஏற்றனர்.
புதிதாக உருவான தேசிய அரசுகளின் மூலாதாரமாக முதலாளிகளும், முதலீட்டிய சக்திகளும் இருந்ததால் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஒன்றுபட்டு அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற கருத்தாக்கம் உருவானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் உருவான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை “அனைத்து தேசங்களின் தொழிலாளர்களே (உலகத் தொழிலாளர்களே) ஒன்றுபடுங்கள்!” என்று அறை கூவியது. அதாவது, கிடைக்கோட்டு நிலையில் பல தேசங்களாகப் பிரிந்திருக்கும் முதலீட்டிய சக்திகளை எதிர்க்க குத்துக்கோடாக அனைத்து தேசத்து உழைக்கும் வர்க்கமும் ஒன்று திரள்வது பயனளிக்கும் என்று கருதப்பட்டது. கருத்தாக்க அளவில் இது மிகுந்த பயனளித்தாலும் நடைமுறையில் சாத்தியமாகவில்லை.
அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று, முதலீட்டிய திரட்சி முதல் சுழற்சியில் தேசிய அளவிலான உற்பத்தியில் நிகழ்ந்தாலும்… இரண்டாவது, சுழற்சியில் சர்வதேச அளவில் மறு முதலீடு செய்யப்படுவதாக இருந்தது. மற்றொரு முனையில் தொழிலாளர்களும் இடம்பெயர்ந்தார்கள் என்றாலும் அவர்கள் பெருமளவு மொழி, கலாசாரம் ஆகியவற்றால் தேசிய எல்லைகளுக்குள் பிணைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், அந்தந்த நாடுகளின் அரசியல் சூழ்நிலைக்கேற்பத்தான் பொதுவுடமை இயக்கங்கள் முன்னேற முடிந்தது. முதல் பொதுவுடமை அரசுகள் தொழில் வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் நிகழாமல் ரஷ்யா, சீனா போன்ற விவசாய நாடுகளில்தான் தோன்றின. மற்றொருபுறம் ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்திருந்த இந்தியா போன்ற நாடுகளில் தேசிய விடுதலையே முதல் அரசியல் தேவையாக இருந்தது.
இந்திய பொதுவுடமை கட்சி தேசியவாதிகளுடன் இணைந்தும், பிரிந்தும்தான் செயல்பட இயன்றது. மேலும் பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்தும் கோட்பாட்டுடன், இந்திய ஜாதீய சமூக ஏற்றத்தாழ்வை நீக்கும் ஜாதீய சமத்துவக் கோட்பாட்டை எப்படி இணைப்பது, அணி திரட்டுவதில் எதற்கு முன்னுரிமை தருவது என்பதிலும் தெளிவான நிலைபாட்டை எடுக்க இயலவில்லை.
இந்திய தேசிய இயக்கமும், சுதந்திர இந்தியாவின் வெகுஜன அரசியலும்
இந்திய தேசியச் சொல்லாடல் ஆங்கிலம் படித்த குடிமைச் சமூகத்தாலும், வளர்ந்து வந்த முதலீட்டிய சக்திகளாலும்தான் முன்னெடுக்கப்பட்டது. காந்தியின் தலைமைக்குப் பிறகுதான் இதில் வெகுஜன பங்கேற்பு என்பது அமைப்பு ரீதியாகச் சாத்தியமானது. அப்படிப் பங்கேற்பு இருந்தாலும்கூட, வெகுஜன அணியாக்கம் என்பது மாநில அளவிலும், குடிமைச் சமூக தலைமை என்பது தேசிய அளவிலும் செயல்பட்டதைக் காண முடியும்.
குடிமைச் சமூக அரசியலுக்கும், வெகுஜன அரசியலுக்குமான வேறுபாடு என்னவென்றால் குடிமைச் சமூக அரசியலில் சட்டங்கள் சார்ந்த கோரிக்கைகள் உரிமைப் பிரச்சினைகள், குறிப்பாக, சொத்துரிமை அம்சங்கள் முன்னுரிமை பெறும். வெகுஜன அரசியலில் பல்வேறு மக்கள் பிரிவினரின் வாழ்வாதார பிரச்சினைகள், அவர்களுடைய சமூகப் பொருளாதார நலிவினை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் முன்னுரிமை பெறும்.
ஒவ்வொரு மக்கள் பிரிவும் தனித்தனியாக அரசியல் செய்ய முடியாது என்பதால், வெகுஜன அரசியல் அணியாக்கத்தில் பொதுவான சில முழக்கங்கள் அனைவரது கோரிக்கைகளின் பொதுக்குறியீடாக வெளிப்படும். எனவே சுதந்திரப் போராட்டத்தில் “வந்தே மாதரம்!” என முழக்கமிட்ட அனைவரும் தனித்தனி பிரிவினரின் கோரிக்கைகளை மனதில் வைத்தே அந்த முழக்கத்தை எழுப்பினர் எனலாம். அனைவரது பிரச்சினைகளுக்குமான தீர்வின் முதல்படி சுதந்திர இந்தியாவாக இருந்தது. எனவே, வெகுஜன அணிச் சேர்க்கை மாநில அளவில் நடந்தது. தலைமை தேசிய குடிமைச் சமூக அமைப்பாக இருந்தது.
இந்தியா சுதந்திரமடைந்தபோது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய கூட்டாட்சிக் குடியரசில் மாநிலங்களே அரசுகள் (State) எனப்பட்டன. ஒன்றியம் அரசாங்கம் (Government) என்றுதான் அழைக்கப்பட்டது. இதற்கேற்ப வெகுஜன தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பும் அதிகாரமும் மாநிலங்களின் பட்டியலிலே அதிகமாக இருந்தன. ஆனால், நிதி மேலாண்மை அதிகாரம் மட்டும் ஒன்றியத்திடம் அதிகம் இருந்தது. மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சியே ஆண்டதாலும், திட்டக்குழு போன்ற அமைப்புகளாலும் இந்தச் சமச்சீரற்ற பகிர்வு ஓரளவு முதல் இருபது, முப்பது ஆண்டுகளில் சமன் செய்யப்பட்டது எனலாம்.
ஆனால், மாநில அரசுகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறும்போது மாநில அளவிலான அணி சேர்க்கைகள் மேலும், மேலும் முக்கியத்துவம் அடைய தொடங்கின. வெவ்வேறு மாநிலங்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு ஏற்ப அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியும் நிகழ்ந்தது. இவற்றால் மாநில அளவிலான முரண் அரசியலே தேசிய அரசியலின் அடிப்படையாக தொடர்ந்து உறுதிப்பட்டு வந்துள்ளது.
உதாரணமாக பொதுவுடமை கட்சிகள் தேசியக் கட்சிகள் என்று கூறிக்கொண்டாலும், கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், பின்னர் திரிபுராவிலும் மட்டும்தான் ஆட்சியமைக்க இயன்றது. மற்ற சில மாநிலங்களில் ஓரளவு அவை செயல்பட்டாலும் அரசியல் அணிதிரட்டலில் மிகவும் பலவீனமாகவே உள்ளன.
முஸ்லிம்கள், சிறுபான்மையினர் மீதான வெறுப்பினை மையப்படுத்தி இந்துத்துவ பாசிச அரசியலை முன்னெடுக்கும் பாரதீய ஜனதா கட்சியால்கூட அனைத்து இந்திய மாநிலங்களிலும் மக்களை அணிதிரட்ட இயலவில்லை. உத்தரப்பிரதேசத்தில் தனியாக ஆட்சியமைத்ததுபோல, பீஹாரில் ஆட்சி அமைக்க இயலவில்லை. கர்நாடகாவில் ஆட்சியமைத்தது போல ஆந்திராவில் ஆட்சியமைக்க இயலவில்லை. குஜராத்தில் மாநில அடையாளத்தை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்த து போல மராத்திய மாநிலத்தில் செய்ய முடியவில்லை.
காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளாக உருமாறியதையும் காணலாம். வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மராத்தியத்தில் தேசியவாத காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என கிளைகள் தோன்றியுள்ளன. இவையெல்லாம் உணர்த்துவது என்னவென்றால் வெகுஜன அரசியல் அணிச் சேர்க்கை என்பதும், முரண் அரசியல் களம் என்பதும் மாநிலங்களில்தான் உள்ளது என்பதுதான். அதனால்தான், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரும் மாநில சுயாட்சிக் கோரிக்கை என்பது இந்திய மக்களாட்சியின் அடுத்த வளர்நிலையாகக் காட்சி தருகிறது.
இட ஒதுக்கீடும், மாநிலங்களும்
தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலும், பழங்குடி சமூகத்தினர் பட்டியலும் ஒன்றிய அரசால் தயாரிக்கப்பட்டன. இந்த இரு பிரிவினருக்கும் ஒன்றிய அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு மாநில அரசுகள் இட ஒதுக்கீடு கொடுத்துக் கொள்ளலாம் என்று முடிவானது. நாற்பதாண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டவருக்கும் ஒன்றிய அரசிலும் 27% இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி வழங்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டவருக்கும் பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டவருக்கும் அந்தந்த மாநில அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் எத்தனை சதவிகித இட ஒதுக்கீடு என்பதை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும் முடிவானது.
உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு 29%; பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது; பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு 12% மட்டுமே.
தமிழ்நாட்டில் பட்டியல் ஜாதியனருக்கு இட ஒதுக்கீடு 18%; பழங்குடியினருக்கு 1%; பிற்படுத்தப்பட்டவருக்கு 50%.
ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் பட்டியல் ஜாதியினருக்கு 15%; பிற்படுத்தப்பட்டவருக்கு 29%. இப்படி மாநிலத்துக்கு மாநிலம் அந்தந்த மாநில மக்கள் தொகை விகிதாசாரம், சமூக நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த பின்னணியில்தான் பட்டியல் ஜாதிகளில் அதிகம் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடோ அல்லது பட்டியலில் உள் வகைப்பாடோ செய்யும் உரிமையும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீடோ, உள் வகைப்பாடோ மாநில அரசுத்துறைகள், மாநில கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலான இட ஒதுக்கீட்டுக்குத்தான் என்னும்போது அதை மாநில அரசுதான் முடிவு செய்ய இயலும்.
வெகுஜன தேர்தல் அரசியலின் களமாகவும் மாநிலங்களே விளங்கும்போது, சமூக கலாச்சார வாழ்வின் புலமாகவும் மாநிலங்களே விளங்கும்போது, கல்வி, வேலைவாய்ப்புகளிலும் மாநில அரசே முக்கியமான பங்கினை வகிக்கும்போது உள் ஒதுக்கீடு மற்றும் வகைப்பாட்டினை மட்டும் ஒன்றிய அரசு செய்வதென்பது தேவையற்றது.
கருத்தாக்க அளவில் குத்துக்கோட்டு அணி சேர்க்கைகள் அதிகாரப் பரவலுக்கு உதவும். நடைமுறையில் கிடைக்கோட்டு அதிகாரப் பரவலை உறுதி செய்வதுதான் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் நன்மை பயக்கும். உலக வரலாறு உணர்த்தும் அதிகாரப் பரவலின் பாதை அதுதான் என்று கூறலாம். அதனால்தான் கூட்டாட்சி தத்துவமும், சமூக நீதி மற்றும் சமத்துவமும் பின்னிப் பிணைந்துள்ளன.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சமூக நீதிக்கு எதிரான “கிரீமி லேயர் விலக்கம்” என்ற கருத்தாக்கம்!
ராகுல் காந்தி, கமலா ஹாரிஸ்: பிற்போக்கு தேசியம் கேட்கும் ஒற்றை அடையாளம்
நிதிப்பகிர்வு பிரச்சினைகள்: கூட்டாட்சிக் குடியரசு என்பது கூட்டுக்குடும்பமா? குடியிருப்பு வளாகமா?