எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ‘முகமூடியார்’ என்று அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அதேசமயம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதில் வேறு ஒருவரை அறிவித்தால் தான் தேஜ கூட்டணிக்கு வருவோம் என்று டிடிவி தினகரன் கூறுகிறார்.
இதுபோன்ற பரபரப்பான சூழலில், நேற்று (செப்டம்பர் 16) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போது முகத்தை கைக்குட்டையை கொண்டு மூடியவாறு சென்றது தமிழக அரசியலில் விவாத பொருளாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “எங்களுக்கு தன்மானம் தான் முக்கியம் என்று செப்டம்பர் 15ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பயங்கர சவுண்டு விட்டார். வானிலை காரணமாகத்தான் பிரச்சாரத்தை தள்ளி வைத்ததாக கதையெல்லாம் விட்டார். ஆனால் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறார்.
ஏற்கனவே உள்துறை அமைச்சரின் அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என்று தகவல் வந்துவிட்டது. ஆனால் இவ்வளவு பொய் சொல்லி யாரை ஏமாற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி.
உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முன் எங்கேயாவது இப்படி பார்த்திருக்கிறீர்களா?
கூட்டணி கட்சித் தலைவர்களை பார்த்துவிட்டு வரும் போது இப்படி முகத்தை மூடிக்கொண்டு ஓடி வருவது ஏன்?
அதோடு, ஊடகங்கள் மூலமாகத்தான் எனக்கு தெரிந்தது எடப்பாடியின் அருகில் அமர்ந்திருந்தது அவரது அன்பு மகன்தான் என்று. இரண்டு பேரும் முகத்தை மூடிக்கொண்டு வருகிறார்கள்.
உள்துறை அமைச்சர் வீட்டில் இருந்து யாரும் முகத்தை மூடிக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “தேவர் தென்மாவட்ட மக்களால் மதிக்கப்படக்கூடியவர். அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதை யார் வேண்டுமானாலும் எடுத்து சொல்லலாம். ஆனால் 10.5 சதவிகிதம் என்று அறிவித்து ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. 105 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இவருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று தெரிந்து அதை சரி செய்வதற்காக முயற்சி எடுக்கிறார்” என்று பதிலளித்தார்.
மேலும் அவர், ‘தன்மானம் மிக்கவர் என்று சொன்னவர் நேற்றிரவு எப்படி வெளியே வந்தார் என்று அனைவருக்கும் தெரியும். அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும். அவர் விடுவது எல்லாம் புருடா. நல்லவேளை முகமூடி கொள்ளையர் மாதிரி வரவில்லை. இல்லையென்றால் போலீஸ் பிடித்து உள்ளே போட்டிருப்பார்கள்” என்றும் கிண்டலடித்துள்ளார்.