15% இடஒதுக்கீடு: டிச.17 -ல் ‘5 லட்சம் வன்னியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்’- அன்புமணி அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Mathi

Anbumani PMK

வன்னியர் ஜாதிக்கு 15% இடஒதுக்கீடு வழங்க கோரி டிசம்பர் 17-ந் தேதி 5 லட்சம் பேருடன் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாபெரும் ஈகம் நிகழ்த்தப் பட்டு இன்று 17ஆம் நாளுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சமூகநீதி நாளாக வரலாற்றில் பதிவாகி விட்ட இந்த நாள் தான் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்ய நம்மைத் தயார்படுத்தும் நாளாகும்.

ADVERTISEMENT

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை 2% உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதற்காகத் தான் 1980ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார்கள்.

அதன் பின் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக எதுவும் நடக்காத நிலையில் தான், 1987ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர் அய்யா அறிவித்தார். அதன்படி, 38 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 17ஆம் நாள் தொடங்கிய ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தில் தான் பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர், நத்தமேடு சுப்பிரமணியன்,பார்ப்பனப்பட்டு பரமசிவம்,விளம்பூர் பன்னீர்செல்வம் ,காயாரம்பேடு மருதசாமி ஆகிய 25 பாட்டாளிகளும் மார்பில் துப்பாக்கிக் குண்டுகளையும், உடல் முழுவதும் காவல்துறை தடியடிகளையும் வாங்கிக் கொண்டு தங்களின் இன்னுயிரை சமூகநீதிக்காக தியாகம் செய்தனர்.

ADVERTISEMENT

அவர்களின் ஈகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், வீர வணக்கம் செலுத்துகிறேன் ” என தெரிவித்துள்ளார்.

மேலும், “வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் 17-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். வன்னியர்கள் 5 லட்சம் பேர் இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்றும் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக, திண்டிவனத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், 1987 இடஒதுக்கீடு போராட்டதில் உயிர் நீத்த தியாகிகளின் உருவ படத்திற்கு மெழுகு வர்த்தி ஏந்தியும் மலர் தூவி கட்சி நிர்வாகிகளுடன் அஞ்சாலி செலுத்தினார் அன்புமணி ராமதாஸ். அதனை தொடர்ந்து உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share