கள்ளக்குறிச்சி கனியமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் கடந்த ஜூலை13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரிக்க டிஜஜி தலைமையில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி, ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
வன்முறையை தூண்டிய வாட்ஸ் அப் குழுக்கள்!
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கில், மறு உடற்கூறாய்வு மற்றும் வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு நேற்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, உடற்கூறாய்வு மற்றும் இறுதிச் சடங்கின் போது முழுமையாக பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மேலும் சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணமாக 3,875 உறுப்பினர்களை கொண்ட 7 வாட்ஸ் அப் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வன்முறை பதிவுகள் நீக்க நோட்டீஸ்!
மேலும், கள்ளக்குறிச்சி வன்முறையை தூண்டிய 63 யூடியூப் சேனல்கள், 31 ட்விட்டர் ஐடிக்கள் மற்றும் 37 ஃபேஸ்புக் கணக்குகள் ஆகியவற்றை எஸ்ஐடி அடையாளம் கண்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களின் ஐபி முகவரியைக் கோரி, அவர்களின் பதிவுகளை தடை செய்ய வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர்களின் பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக ஊடக நிறுவனங்களின் நோடல் அதிகாரிகளுக்கு எஸ்ஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் தப்ப முடியாது!
அதனைத் தொடர்ந்து அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதாடினார். அவர் பேசும் போது “வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஒரு கோணத்திலும், கலவரம் தொடர்பான வழக்கு மற்றொரு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பள்ளித் தாளாளர் வேறு சில குற்றவாளிகளுடன் தொடர்பு உடையவர் என்பதால் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

யூடியூப் தளங்கள் மீது எஸ்ஐடி நடவடிக்கை எடுக்க அனுமதி!
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் திருப்தி அடைவதாக தெரிவித்த நீதிபதி, ”இந்த சம்பவத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பும் பட்சத்தில் அந்த யூடியூப் தளங்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுக்கலாம். மேலும் வன்முறையை தூண்டியவர்களின் உண்மையான அடையாளத்தைக் கண்டறிந்து அடுத்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 29 ஆம் தேதி தள்ளி வைத்தார்.

ஸ்ரீதர் வாண்டையாரிடம் விசாரணை?
கள்ளக்குறிச்சி வன்முறைக்கு முக்கிய காரணமாக உள்ள 7 வாட்ஸ் அப் குழுக்களில் உறுப்பினர்களாக ஸ்ரீதர் வாண்டையார் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சாதியினரும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுமே பெருமளவில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ஸ்ரீதர் வாண்டையார் உட்பட அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கிற்ஸ்டோபர் ஜெமா