வைஃபை ஆன் செய்ததும், “சட்டென மாறுதே அரசியல் வானிலை” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
தேர்தல் வருதுல்ல.. எல்லா அரசியல் வானிலையும் தாறுமாறாகத்தான் இருக்கும்.. எந்த கட்சி விவகாரம்யா?
ஆளும் திமுக மேட்டரைத்தான் சொல்ல போறேன்..
ஓஹோ
திமுகவின் முதன்மைச் செயலாளரும் சீனியர் அமைச்சருமான கே.என்.நேரு, திருவாரூர் கூட்டத்துல பேசும் போது, “பாஜக குறிவெச்சு அடிக்கிறாங்க.. இதுல முதல் பலி நான்.. எதையும் எதிர்கொள்வோம்.. துவண்டு போய் விட்டுவிடமாட்டோம்.. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுவோம்” என உணர்ச்சி பூர்வமாக பேசியிருந்தார்.
ஆமாம்.. நேருவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதே..
திமுகவிலும் அமைச்சரவையிலும் சீனியரான கே.என்.நேரு, இப்படி பேச காரணமே, அமலாக்கத்துறையின் அந்த கடிதம்தான்..
எது டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்புன கடிதமா?
ஆமாம்.. அந்த கடிதத்துல, ” : 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், நகர திட்டமிடல் அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமனங்களில் முறைகேடுகள் நடந்துருக்கு.. வ்வொரு பணிக்கும் ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சம் வாங்கி இருக்காங்க..

வங்கி கடன் மோசடி தொடர்பாக அமைச்சர் நேருவின் குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, கிடைத்த ஆவணங்கள், ஹவாலா குறிப்புகள், பணப் பரிவர்த்தனைகள் எல்லாமே இந்த மோசடியில் தொடர்பானவை.. “ன்னு சொல்லி இருந்தது.
அமலாக்கத்துறையின் இந்த கடிதம் மீடியாக்களில் வெளியானதுக்கு பின்னால நடந்த சம்பவம் இருக்கே.. அடேங்கப்பா ‘ரகம்’தான்..
ஓஹோ.. மீடியாவுக்கு எப்படி லீக் ஆனதாம்?
அக்டோபர் 29-ந் தேதி சென்னையில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்கு, அமலாக்கத்துறை தரப்பில் இருந்து டிஜிபிக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறோம் என்கிற தகவல் லீக் செய்யப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் டீமும் டிஜிபி ஆபீஸை தொடர்பு கொண்டு, அமலாக்கத்துறை கடிதம் பற்றி கேட்டிருக்கு..
மறுநாள் பத்திரிகைகளில் அமலாக்கத்துறை அனுப்புன கடிதம் பற்றிய தகவல் விலாவாரியாக வந்ததுக்கு அப்புறம் பெரும் பரபரப்பாகிடுச்சு.. எதிர்க்கட்சி தலைவர்களும் வரிசையாக கண்டங்களை அள்ளி குவிச்சுட்டாங்க..
பாஜக மாஜி தலைவர் அண்ணாமலை ரொம்பவே ஆர்வமாக, ஆவேசமாகவே பேசியிருந்தார். இதுபற்றி பாஜக வட்டாரங்களில் நாம் பேசிய போது, “அண்ணாமலை இப்படி பேச காரணமே ராஜ்பவன்தான்.. ஆளுநர் மாளிகை மீடியா விங் டீம்தான் அண்ணாமலையை தொடர்பு கொண்டு விவரங்களை ஷேர் செஞ்சு ரொம்ப பெரிசாக்கிவிடனும்னு சொல்லி இருக்கு.. அந்த அசைன்மென்ட்படியே அண்ணாமலையும் ருத்ர தாண்டவமாடுனாரு.. இப்ப, இளைஞர்கள் மத்தியில ‘திமுக ஆட்சியில் ஊழல் ‘ நடந்துருக்குமோன்னு சந்தேக நிழல் படிஞ்சுருச்சு’ என்றனர்.
இப்படி ஒரு மீடியா ரிப்போர்ட் வெளியாகி, எல்லா தலைவர்களும் தம்மை டார்கெட் செஞ்சு அறிக்கை விட அமைச்சர் கே.என்.நேரு ரொம்பவே ஷாக் ஆகிட்டாராம்..
இதுபற்றி அமைச்சர் கே.என்.நேரு வட்டாரங்களில் நாம் பேசிய போது, “அமலாக்கத்துறை சொன்ன நியமனங்களில் எந்த ஒரு முறைகேடுமே நடக்கலை.. ஆனால் அபாண்டமாக குற்றச்சாட்டு வைக்கிறாங்கன்னுதான் அண்ணன் சொல்றாரு.. அண்ணன் குடும்பத்து மீது இருக்கிற வங்கி கடன் மோசடி- வங்கியில வாங்கிய கடனை வேறு கணக்குகளுக்கு மாற்றிய வழக்கு விசாரணை முடியுற நிலைமையில் இருக்கு.. இந்த கேஸில்தான் ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி சில டிஜிட்டல் டாக்குமெண்ட்ஸ் எடுத்துகிட்டு போனது.. ஆனால் சிபிஐ நடவடிக்கையை ரத்து செஞ்சு உத்தரவிட்டது ஹைகோர்ட்.. இதனால அமலாக்கத்துறையால எதுவும் செய்ய முடியாமல் போக.. இப்ப அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கு.. அவ்வளவுதான்” என்கின்றனர்.
இவ்வளவு பெரிய பிரளயம் நடந்துருக்கே.. சிஎம் என்ன நினைக்கிறாரு?
நல்ல கேள்விதான்யா.. சிஎம்-க்கு நெருக்கமான சோர்ஸ்களிடம் பேசுனப்ப, “முதல்வர் இந்த விவகாரத்துல அதிர்ச்சி எல்லாம் ஆகலை.. ஏன்னா இந்த நியமனங்களில் என்ன நடந்ததுன்னு ஆரம்பம் முதல் அத்தனையுமே அவருக்கு தெரியும்..
இந்த இன்ஜினியர் பணியிடங்களை மெரிட் அடிப்படையில் போட்டுவிட்டு கொஞ்சம் இடங்களை திமுகவினருக்கும் கொடுக்கலாம்னு சிஎம்கிட்ட ஒரு ஆலோசனை நடந்துச்சு..
அப்ப அமைச்சர் நேரு, மூத்த அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்கள்- மாவட்ட செயலாளர்கள்- ஒன்றிய- கிளை செயலாளர்கள் கொடுத்த சிபாரிசு கடிதங்களை எல்லாம் சிஎம்கிட்ட காட்டினாரு..
ஆனாலும் சிஎம், “அப்படி எல்லாம் போட வேண்டாம்.. மொத்தமாகவே மெரிட் அடிப்படையிலேயே போட்டுவிடுங்க..”ன்னு சொல்லிட்டாரு.. அமைச்சர் நேருவும் அப்போது ஓகே சொல்லிட்டாரு..
இப்படி நேர்மையாக நடந்த பணி நியமனங்களுக்கான கடிதங்களைத்தான் சிஎம் கொடுத்தாரு…
இப்படி மெரிட்டுல போட்டதால பணி கிடைச்சும் 400 பேர் வரைக்கும் கூடுதல் சம்பளம் கிடைக்குதுன்னு வேற டிபார்ட்மெண்ட்டுக்கும் போயிட்டாங்க.. அதனால இதுல அதிர்ச்சியாகிற அளவுக்கு எதுவும் இல்லைங்கிறதுதான் சிஎம் நிலைப்பாடு” என்றனர்.
அப்ப விசாரணையே இருக்காதா?
அப்படி சொல்ல முடியாதுய்யா.. “அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 66(2) ஐ பயன்படுத்தி, மாநில காவல்துறை உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்து குற்றவியல் விசாரணையைத் தொடங்கனும்னு சொல்லி இருந்துச்சு..
அதனால முதல் கட்ட விசாரணையை விஜிலென்ஸ் நடத்த சொல்லலாம்னு சிஎம்மும் அதிகாரிகளும் முடிவெடுத்திருக்காங்க..
இந்த விசாரணையில் எதுவும் நடக்கலைன்னு தெரிஞ்சா, அதையே ரிப்போர்ட்டாக கொடுப்பாங்க.. அப்படி ஏதாவது தவறு நடந்துருக்கு உறுதியானால்தான் அடுத்த கட்டமான ‘விரிவான விசாரணை’ நடத்துவாங்க.. அப்பதான் அமலாக்கத்துறை எதிர்பார்க்கிற மாதிரி உள்ளே நுழையவும் முடியும்” என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
இந்த விவகாரத்துல இன்னொரு சம்பவமும் நடந்துருக்குதுய்யா..
அது என்னவாம்?
இந்த போஸ்டிங்கை திமுக கட்சிக்காரங்களுக்குதான் தரப்போறாங்கன்னு ஒரு தகவல் தீயாகப் பரவியதால, சில அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள்- திமுக பொறுப்பில் இருப்பவங்க சில பேரிடம் பணம் வாங்கி இருக்காங்களாம்..
இப்ப மெரிட்ல போஸ்டிங் போட்டிருந்தாலும், ‘நாங்க சொல்லிதான் உங்களுக்கு போஸ்டிங் கிடைச்சதுன்னு’ சொல்லி சமாளிக்கிறாங்க
போஸ்டிங் கிடைக்காதவங்க.. பணத்தை திருப்பி கேட்க போய்.. சில பேரு இழுத்தடிச்சுகிட்டும் இருக்காங்கன்னும் ஒரு தகவல் இருக்குதுப்பா…
ஓஹோ.. இப்பதான்யா நேரு ஏன் திருவாரூரில், தான் முதல் ஆளாக பலி ஆகிட்டேன்னு பேசுனது ஏன் தெளிவாகவே புரிஞ்சுடுச்சு..
பொறும்யா.. கே.என்.நேருவோட மட்டும் இது நிற்காது போல.. டெல்லி சோர்ஸ்களிடம் நாம பேசுனப்ப, “எங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டே திமுகவை டேமேஜ் செய்யனும் என்பதுதான்.. அதுல ஒன்னுதான் நேரு மேட்டர்..
இப்பவும் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, சக்கரபாணி, மூர்த்தி, அன்பில் மகேஷ்னு பெரிய லிஸ்ட்டே எங்க கையில் இருக்கு..
இவங்களோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சுகிட்டுதான் இருக்கிறோம்..
இந்த அமைச்சர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் யாரெல்லாம் என்ன என்ன செய்யுறாங்கன்னு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தீவிரமாக கவனிச்சுகிட்டே இருக்கு..
அவ்வளவு ஏன்..திமுகவிலேயே இந்த அமைச்சர்களை பற்றிய பல தகவல்களும் கூட எங்க டீம்களுக்கு ஷேர் செய்யுறாங்க.. அதனால ஆட்டமே இனிமேல்தான் ஜரூராக இருக்குமாம்”என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
