நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி உள்ளிட்ட தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.mission
2022-ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெகதீப் தன்கர் ராஜினாமா தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
2027-ம் ஆண்டு வரை ஜெகதீப் தன்கரின் பதவி காலம் இருந்த போதும் அவர் தமது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். இந்த தகவல் முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்தால், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் படி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிக்கை வெளியான 32 நாட்களுக்குள் அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதன்படி ஆகஸ்ட் மாத இறுதிக்குள் துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள்- தேர்தல் ஆணையம் விளக்கம்
துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஜுலை 22, 2025 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எஸ்.ஓ.3354(இ) மூலம் அறிவிக்கை செய்துள்ளது.
இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலானது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952 மற்றும் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் விதிகள், 1974 ஆகியவற்றின்கீழ் நடத்தப்படுகின்றது.
இதற்கேற்ப, இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டது. ஏற்பாடுகள் முடிவடைந்த பிறகு குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை கூடிய விரைவில் வெளியிடப்படும். மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தும் அதிகாரி/ உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. முந்தைய அனைத்து குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் தேர்தல்கள் குறித்த பின்புலத் தகவல்கள் தொகுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.









