கரூர் கூட்ட நெரிசல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து இன்றோடு (அக்டோபர் 13) 17 நாட்கள் ஆகிவிட்டது. தங்களது அன்பார்ந்தவர்களை இழந்து தவிக்கும் கரூர் மக்கள் உண்மை வெளி வரவேண்டுமென காத்திருக்கின்றனர்.
இந்தசூழலில் தான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு மறுத்துவிட்டது. அன்றைய தினமே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதவிர உச்ச நீதிமன்றத்தில் மேலும் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கரூரில் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் பிச்சமுத்து, பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ், பாஜகவைச் சேர்ந்த ஜி.எஸ்.மணி ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, ஒரே நாளில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது, அதற்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. இது என்ன மாதிரியான நடைமுறை. எஸ்.ஐ.டி அமைத்தது எப்படி? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவு பிறப்பித்தது.
சிபிஐ விசாரிக்க இடைக்கால உத்தரவு!
அப்போது, ‘ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அரசியல் பேரணிகளுக்கு ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வகுக்க கோரிய மனு. எஸ்.ஐ.டி விசாரணை கோரி அல்ல. அப்படி இருக்கும் போது SOP மனுவை குற்றவியல் மனுவாக எடுத்து விசாரித்து உத்தரவு பிறப்பித்தது எப்படி என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை நாங்கள் தீவிரமாக கவனித்தோம். தனி நீதிபதி தாமாக முன்வந்து வழக்கின் வரம்பை விரிவுப்படுத்தி எஸ்.டி.ஐ அமைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
சம்பவம் நடந்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரம்பிற்குள் வருகிறது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் எப்படி விசாரித்தது? அதுவும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை மதுரை அமர்வில் இரு நீதிபதிகள் விசாரித்து, தற்போது விசாரணை ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கிறது. சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை குழு தேவையில்லை என கூறியிருக்கும் போது, தனி நீதிபதி சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கக் கூடாது.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக தரப்பில் யாரும் வழக்கில் சேர்க்கப்படாமலேயே , அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமலேயே தனி நீதிபதி சில கருத்துகளை கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனி நீதிபதி எப்படி இந்த முடிவுக்கு வந்தார்? நீதிமன்றத்தால் என்னென்ன ஆவணங்கள் ஆராயப்பட்டன என்பது குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. அந்த உத்தரவு அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலின் வாதங்களையே குறிக்கிறது.
எங்களுடைய பார்வையில், அரசியல் பேரணிகளின் போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரும் இதுபோன்ற மனுக்களை பொதுநல வழக்காக பதிவு செய்து அதை டிவிசன் பெஞ்ச் விசாரிக்கலாம். தனி நீதிபதி கூடாது.
ஒரே நீதிமன்றம், ஒரே மாதிரியான வேண்டுகோளைக் கோரி தொடரப்படும் வழக்குகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் தெரியவில்லை.
சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரிட் மனுவில் கேட்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மாறாக வழக்கின் வரம்பை விரிவுப்படுத்தியது வியப்புக்குரியது. முக்கிய நீதிபதியாக இருக்கும் தனி நீதிபதி, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தல் தொடர்பான விஷயத்தைக் கையாளும் போது, எந்தவொரு ஆவணத்தையும் குறிப்பிடாமல் அல்லது விசாரணையின் முன்னேற்றத்தில் அதிருப்திக்கான எந்தக் காரணத்தையும் எழுப்பாமல் தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது முற்றிலும் முரண்பாடானது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து, ‘நாட்டின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவத்தில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் . எனவே இந்த சம்பத்தை சிபிஐ விசாரிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரோஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு மேற்பார்வையிடும். அந்த குழுவில் தமிழக கேடரைச் சேர்ந்த காவல்துறையில் ஐஜி அந்தஸ்துக்கு குறையாத, தமிழகத்தை பூர்விகமாக கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். இவர்கள் அஜய் ரோஸ்தோகியால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த குழுவுக்கு சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் சுதந்திரம் உள்ளது.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கையை இந்த குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
மோசடி மனுத்தாக்கல் உறுதியானால்…
இந்த உத்தரவை தொடர்ந்து, சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறியது குறித்து வழக்கறிஞர்கள் ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதை பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது உறுதியானால் அது தொடர்பாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்றனர்.
மூத்த வழக்கறிஞர் வில்சன் பேட்டி!
மேலும் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய 8 வார கால அவகாசத்தையும் நீதிபதிகள் வழங்கினர்.
இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், ‘இது இடைக்கால தீர்ப்புதான்… இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. கரூரில் அருணா ஜெகதீசனின் ஆணைய விசாரணை தொடரும். எஸ்.ஐ.டி விசாரணை குழு இதுவரை என்ன விசாரித்துள்ளதோ அதனை சிபிஐக்கு மாற்றம் செய்ய சொல்லி உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
ஒருவேளை அந்த மனுக்கள் போலியானதாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், தற்போதைய உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது. கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரிக்கப்படும். மோசடி என்பது தெரியவந்தால் சிறைக்கு கூட அனுப்பப்படலாம்” என்று தெரிவித்தார்.