இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று செப்டம்பர் 1-ந் தேதி திடீரென கச்சத்தீவு சென்றார். கச்சத்தீவில் ஒரு மணிநேரம் கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார் ஜனாதிபதி அநுர.
தமிழகத்தின் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என பேசியிருந்தார். இதனால் இலங்கையில் கடந்த ஒரு வாரமாக கச்சத்தீவு பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நடிகர் விஜய் பெயரை குறிப்பிடாமல், கச்சத்தீவு விவாதங்கள் பற்றி பேசினார். கச்சத்தீவை, இந்தியாவுக்கு மீண்டும் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என கூறியதுடன் தாம் இன்றே கச்சத்தீவை பார்வையிட செல்கிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு சென்றார் அநுர குமார திஸாநாயக்க. இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜேபால, இலங்கை வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே ஆகியோருடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கச்சத்தீவுக்கு சென்றார்.

கச்சத்தீவில், வரைபடத்தை வைத்து அதன் அமைவிடம் உள்ளிட்டவை குறித்து கடற்படை அதிகாரிகள் அநுராவுக்கு விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக இலங்கை மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அநுர.

அத்துடன் கச்சத்தீவில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் அநுரா ஆலோசனை நடத்தினார் என்கின்றனர்.