ADVERTISEMENT

இடம் மாறி விடப்பட்ட காட்டு யானைகளின் மரணங்களுக்கு காரணம் என்ன?

Published On:

| By Minnambalam Desk

ஓசை காளிதாசன்

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த சில யானைகளின் மரணம் இயற்கை ஆர்வலர்களிடையே பேசு பொருளாகி விவாதிக்கப்படுகிறது. சில மரணங்கள் குறித்து நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பிடிக்கப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் விடப்பட்ட ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ரோலக்ஸ் ஆகிய இரண்டு யானைகள் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்ததால் இந்த விவாதம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

யானைகளுக்கு இப்படி பெயர் வைப்பது சரியானதா? என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. உள்ளூர் மக்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து அழைக்கலாம். ஆனால் வனத்துறை இத்தகைய யானைகளுக்கு ஒரு அடையாள எண் கொடுத்து அழைக்க வேண்டும். எனினும் இப்போது மக்கள் வைத்த பெயரையே பயன்படுத்த வேண்டி உள்ளது.

இந்த இரண்டு யானைகளும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நுழைந்து பயிர் சேதம் விளைவித்ததோடு மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் உள்ளூர் மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு பிடிக்கப்பட்டு சில நாட்கள் வனத்துறையின் யானை முகாமில் உள்ள யானை பந்திகளில் (kraal) வைக்கப்பட்டு பின்னர் காடுகளில் விடுவிக்கப்பட்டவை.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 1985 முதல் இதுவரை சுமார் 22 காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடியேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆண் யானைகள் ஆகும். இவற்றில் ஐந்து யானைகள் காட்டை விட்டு வெகு தூரம் வெளியே வந்ததால் பிடிக்கப்பட்டு மீண்டும் அதே காட்டில் விடப்பட்டவை. மற்ற யானைகள் வேறு காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான யானைகள் விடப்பட்ட சில நாட்களிலேயே காட்டை விட்டு வெளியே வந்து பயிர் சேதம் விளைவித்தல், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டன. சில யானைகள் இறந்து போயின. சில யானைகளைப் பற்றிய தகவல் இல்லை.

ADVERTISEMENT

ஜவ்வாதுமலை பகுதியில் 1985இல் பிடிக்கப்பட்டு ஆனைமலை பகுதியில் விடப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்று பொள்ளாச்சி பகுதியில் நுழைந்து மிகுந்த பயிர் சேதம் ஏற்படுத்தியதால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானையாக்கப்பட்டது. அதுவே இப்போது ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பாரி எனப்படும் புகழ்பெற்ற கும்கி யானை. மற்றொரு யானை பாலக்காடு பகுதிக்கு சென்று பயிர் சேதம் ஏற்படுத்தியதால் கேரள வனத்துறையால் பிடிக்கப்பட்டது.

அரிசி ராஜா

கடந்த 2017 ஆம் ஆண்டு கோயம்பத்தூர், வெள்ளலூர் பகுதியில் காட்டை விட்டு வெளியே வந்து 4 பேர் மரணத்திற்கு காரணமான அரிசிராஜா என்ற யானை பிடிக்கப்பட்டு ஆனைமலை பகுதியில் விடப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே சேத்துமடை பகுதிக்கு வந்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்ததால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு‌ யானையாக மாற்றப்பட்டு இப்போது முத்து என்ற பெயரில் கும்கியாக செயல்படுகிறது.

சின்னதம்பி, விநாயகன்

கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய யானைகள் ஆனைமலை மற்றும் முதுமலை பகுதிகளில் விடப்பட்டன. ஆனைமலையில் விடப்பட்ட சின்னத்தம்பி சில நாட்களிலேயே காட்டை விட்டு வெகு தூரம் வெளியே வந்து பயிர் சேதம் ஏற்படுத்தியதால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானை ஆக்கப்பட்டது. இப்போது கும்கி ஆக செயல்படுகிறது. முதுமலையில் விடப்பட்ட விநாயகன் கர்நாடகா பகுதியில் நுழைந்து பயிர் சேதம் ஏற்படுத்தியதால் பிடிக்கப்பட்டு பந்தியில் அடைத்திருக்கும்போது இறந்து போனது.

குரோபர்

ஓசூரில் பிடிக்கப்பட்ட குரோபர் யானை கர்நாடக எல்லையில் விடப்பட்டது. அது மீண்டும் தான் வாழ்ந்த பகுதிக்கு வந்து பயிர் மேச்சலில் ஈடுபட்டதால் மீண்டும் பிடிக்கப்பட்டு முதுமலை பகுதியில் விடப்பட்டது . அங்கும் காட்டை விட்டு வெளியே வந்து பயிர் மேய்ந்ததால் கர்நாடகாவின் பந்திப்பூர் பகுதியில் பிடிக்கப்பட்டது.

மக்னா

தர்மபுரி, பாலக்கோடு பகுதியில் பிடிக்கப்பட்ட ஓர் ஆண் யானை (மக்னா) ஆனைமலையில் விடப்பட்டது. அந்த யானை மலைப்பகுதியில் இருந்து சமவெளிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து பாலக்காட்டு கணவாயை கடந்து கோவை பகுதிக்கு வந்தது (பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாலக்காட்டு கணவாய் கடந்த காட்டு யானை) . மீண்டும் ஆனைமலை பகுதிக்கு முடுக்கப்பட்ட யானை புதிய இடத்தில் வழுக்கி விழுந்து இறந்து போனது.

PM2 என்ற மக்னா

கூடலூர் பகுதியில் பிரச்சனைக்குரிய யானையாக கருதப்பட்ட PM2 என்ற மக்னா யானை அங்கு பிடிக்கப்பட்டு காங்கிரஸ்மட்டம் பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானை கேரளாவின் வயநாடு பகுதிக்கு சென்று பயிர் சேதம் ஏற்படுத்தியதால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டுள்ளது.

கொய்யா கொம்பன்

கொய்யா கொம்பன் எனும் யானை ஓசூர் பகுதியில் பிடிக்கப்பட்டு காவிரி சரணாலயப் பகுதியில் விடப்பட்டு மீண்டும் வெளியே வந்ததால் நீலகிரி மாவட்டம் காங்கிரஸ்மட்டம் பகுதியில் விடப்பட்டது. அதன் பிறகு அந்த யானை பற்றிய தகவல் இல்லை.

ஒரு பகுதியில் பிரச்சனைக்குரிய யானைகளாக கருதப்பட்டு வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளன.

பிற மாநிலங்களிலும் இதே நிலைதான்

கர்நாடகாவில் ஹாசன் பகுதியில் பிடிக்கப்பட்ட இரண்டு ஆண் யானைகள் 200 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டன. அவற்றில் ஒரு யானை ஒரு வாரத்தில் மீண்டும் தான் வாழ்ந்த காட்டுக்கே திரும்பியது. மற்றொரு யானை சில மாதங்களில் ஹாசன் திரும்பியது.

காட்டு யானைகளை அதன் வாழ்விடத்திலிருந்து ஏன் அகற்ற வேண்டும்? என்ற கேள்வி முதன்மையானது.

எந்த யானையும் காட்டை விட்டு வெளியே வந்த முதல் தருணத்திலேயே பிடிக்கப்படுவதில்லை.

தொடர்ச்சியாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர் சேதம் ஏற்படுத்துதல், வீட்டை உடைத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு அதனையே பழக்கமாக்கிக் கொண்ட யானைகளையே பிடிக்குமாறு உள்ளூர் மக்கள் வற்புறுத்துகின்றனர். சில யானைகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து நிகழும் போதும் அவற்றைப் பிடிக்க வலியுறுத்துகின்றனர்.

உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்த மறுநாளே யானையை பிடிக்கும் முடிவை வனத்துறை எடுத்து விடுவதில்லை. அவற்றைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். பல்வேறு தடுப்பு முயற்சிகள் செயல்படுத்தப்படும். இவற்றையும் மீறி வெளியே வரும் யானைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் கொந்தளிப்படைகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தொடர் கோரிக்கை வைக்கப்படுகிறது. போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசியல் பிரமுகர்களால்
மிகுந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சென்னையில் உள்ள வனத்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. அதன் விளைவாகவே பிடிக்கும் முடிவு எடுக்கப்படுகிறது.

பிடித்து என்ன செய்வது?

ஒன்று வளர்ப்பு யானையாக மாற்றுவது . அல்லது வேறு இடத்தில் விடுவது.

ஒரு காட்டு யானை காட்டில்தானே இருக்க வேண்டும் என்ற இயற்கை நியாயத்தின் படியே வேறு இடத்தில் விடப்படும் முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிவடைந்து விடுகின்றன.

அதற்கு பல காரணங்கள் உண்டு. தொடர்ந்து விளைநிலங்களில் பயிர்களை சாப்பிட்டு பழகிய யானைகள் விடப்பட்ட இடங்களிலும் அதனை தொடர்கின்றன.

நமது மாநிலத்தில் 25 கிமீ தொலைவுக்குள் மனித குடியிருப்புகள் அற்ற காடுகள் அரிதாகவே உள்ளன. அவற்றிலும் யானைகள் வாழ தகுதியான காடுகள் மிகக் குறைவு. யானைகள் தொலைதூரம் நடக்கும் வல்லமை கொண்டவை.

பயிர்களை மேய்ந்து பழகிய யானைகளை எங்கு இடப் பெயர்ச்சி செய்தாலும் விளைநிலங்களைத் தேடி வந்து விடுகின்றன. எனவே யானையோடு பிரச்சனையையும் இடம் மாற்றம் செய்கிறோம். அதனால்தான் இடப்பெயர்ச்சி செய்ய தேர்வு செய்யப்பட்ட இடங்களில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

யானைகள் கூட்டமாக வாழ்பவை. உறவுகளுக்குள் நெருங்கிய பிணைப்பை கொண்டவை. ஆண் யானைகள் பல நேரங்களில் தனித்து வாழ்ந்தாலும் அவ்வப்போது கூட்டங்களோடு இணைந்து கொள்ளும். அல்லது ஆண் யானைகள் இணைந்து கூட்டம் அமைத்துக் கொள்ளும். அத்தகைய யானைகள் அவைகளுக்கு தொடர்பற்ற புதிய காட்டில் தனியே விடப்படும் போது மிகுந்த மன அழுத்ததிற்கு உள்ளாகின்றன. அதனால் ஏற்படும் உடல் நலக் குறைபாடு காரணமாக அவை இறந்து விடும் அபாயமும் உள்ளது. எனவே ஆப்பிரிக்காவில் இடப்பெயர்ச்சி செய்யும் போது கூட்டமாகவோ அல்லது ஒரு சில யானைகளோடு இணைந்தோ விடப்படுகின்றன. அவ்வாறு நமது ஊரில் நடைபெற வாய்ப்பில்லை.

எனவே நேரடியாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்வதற்கு பதிலாக அண்மைக்காலமாக பிடிக்கப்படும் யானைகளை முகாமில் பந்திகளில் சில நாட்கள் வைத்து அவற்றை ஓரளவு அமைதிப்படுத்தி பின்னர் விடுவிக்கப்படும் (soft release) முயற்சி நடைபெறுகிறது.

கூடலூர் – மசினகுடி பகுதியில் மனிதர்கள் பல ஆண்டுகளாக உணவு கொடுத்து பழக்கியதால் ரிவால்டோ எனும் யானை மனித குடியிருப்புகளை சார்ந்தே வாழ்ந்து வந்தது. இதனால் அச்சப்பட்ட கிராம மக்கள் அதனைப் பிடிக்க வலியுறுத்தினர். அதனைப் பிடித்து வளர்ப்பு யானையாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. நீதிமன்ற தலையீட்டால் காட்டிலேயே விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் உடனடியாக விடாமல் சில காலம் யானை பந்தியில் வைத்து இயற்கை உணவு மட்டுமே கொடுத்து பழக்கி காட்டில் விடப்பட்டது. சமிக்கையுடன் கூடிய கழுத்து பட்டை ( ரேடியோ காலர்) பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

குடியிருப்புக்கு அருகில் வரும்போதே கும்கி யானைகள் கொண்டு காட்டுப் பகுதிக்கு துரத்தப்பட்டது. சில மாதங்களில் அந்த யானை குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தவிர்த்து காட்டிலேயே வாழ பழகிக் கொண்டது. (இப்போது சில நாட்களாக அந்த யானை தென்படாத காரணத்தால் தேடி வருகின்றனர்) .

ரிவால்டோ அனுபவத்தைக் கொண்டு அரிக்கொம்பன் யானை விடப்பட்டது. இந்த யானை கேரளாவில் மூணாறு பகுதியில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அந்த யானை தமிழ்நாட்டில் கம்பம் பகுதிக்குள் நுழைந்து மக்கள் நெருக்கம் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. எனவே அந்த யானை மீண்டும் பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் பொருத்தி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மேல்கோதையாறு பகுதியில் விடப்பட்டது . உயிரியலாளர்கள், வனத்துறையினர் உள்ளடக்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு யானை கண்காணிக்கப்பட்டது. பல மாதங்களாக அப்பகுதியிலேயே அதன் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நீலகிரியில் கூடலூர் பகுதியில் வீடுகளை இடித்து பழகிய (150 க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துள்ளது) புல்லட் யானை பிடிக்கப்பட்டு சில நாட்கள் பந்தியில் வைக்கப்பட்டு பின்னர் கோதையார் பகுதியில் விடப்பட்டது. அந்த யானையும் மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் காட்டுப் பகுதியிலேயே சுற்றித்திரிகிறது.

அதன் தொடர்ச்சியாகவே ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்ட OV T1 யானை நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பல மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்ததால் பிடிக்கப்பட்டு சில நாட்கள் பந்தியில் வைக்கப்பட்டு பின்னர் கோதையார் பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அந்த யானை நலமுடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. ஆனால் மலைப்பகுதியில் ஒரு பக்கம் மின் கம்பியும் மறுபக்கம் சாலையும் இருந்த சூழலில் எதிர்பாராத விதமாக பாறையில் கால் வைத்து சறுக்கி விழுந்து இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து பயிர் சேதம் விளைவித்து வந்த ரோலக்ஸ் யானை கடந்த அக்டோபர் 17 அன்று பிடிக்கப்பட்டு சில நாட்கள் வரகளியாறு யானைகள் முகாமில் பந்தியில் வைத்து பின்னர் மந்திரிமட்டம் பகுதியில் விடுவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களாக அப்பகுதியில் இருந்த யானை திடீரென மரணம் அடைந்தது. உடற்கூறு ஆய்வில் அதன் இதயம் மற்றும் பெரிகார்டியம் பகுதியில் ரத்தம் தேங்கியுள்ளதாக அறியப்படுகிறது. முழுமையான காரணத்தை அறிய உடற்பாகங்கள் ஆய்வுக்காக பல்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

யானைகளின் மரணம் இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பது இயல்பானதே.

ஆனால் இதற்கான காரணத்தை முழுமையாக அறியாமல் பொத்தாம் பொதுவான விமர்சனங்களை கூறுவது யானைகள் பாதுகாப்பில் பின்னடைவையே ஏற்படுத்தும்.

மயக்க மருந்து செலுத்துவதால் மரணமா?

மயக்க ஊசி மாற்றப்பட்டுள்ளது அல்லது அளவு அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு வழக்கம்போல் சிலரால் பரப்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக சைலாசின் +கேட்டமின் (xylazine + ketamine) மயக்க மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. அவை மாற்றப்படவில்லை. உலகம் முழுவதும் அறியப்பட்ட மிகப் பாதுகாப்பான மருந்துகள் இவை. மூன்று மடங்கு அதிகம் செலுத்தப்பட்டாலும் யானைகளுக்கு ஆபத்து ஏற்படாது என்றே கால்நடை மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் ஏற்கனவே உடல் உறுப்புகள் பாதிப்படைந்துள்ள யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்படும் போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

அண்மை ஆண்டுகளாக இரண்டுக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் கூட்டு முயற்சியின் மூலமாகவே யானைகள் பிடிக்கும் செயல் நடைபெறுகிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் மருத்துவர்கள் சோர்வுற்று விடுகின்றனர். வனத்துறைக்கு என்று தனியே மருத்துவர்கள் கிடையாது. கால்நடை மருத்துவத் துறையில் இருந்துதான் இங்கு மாற்றுப் பணியாக ( deputation) மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் பணியாற்றும் கால்நடை மருத்துவத் துறையில் இருந்து வனத்துறை பணிக்கு வர பெரும்பாலானோர் தயங்குகின்றனர். இப்பணி கடுமையானது என்பதை அறிவர். அண்மையில் ரோலக்ஸ் யானையை பிடிக்கும் முயற்சியின் போது யானையால் தாக்கப்பட்டு கால்நடை மருத்துவர் படுகாயம் அடைந்தார். இத்தகு சூழலில் காட்டுயிர்கள்மீது ஆர்வமும் அக்கறையும் கொண்ட ஒரு சில மருத்துவர்களே வனத்துறையில் பணியாற்ற வருகின்றனர். அவர்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் காயப்படுத்தும்போது சோர்வடைந்து விடுகின்றனர். எனவே நன்கு ஆராயாமல் செய்திகளை பரப்புவது தவறானதாகும்.

காட்டை விட்டு தொடர்ந்து வெளியே வருவதை பழக்கமாக்கிக் கொண்ட யானைகளையே பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

யானைகள் ஏன் காட்டைவிட்டு வெளியே வருகின்றன?.

யானைகள் உருவில் பெரியவை. பெரிய உருவத்திற்கு ஏற்ப அதிக உணவு தேவைப்படுகிறது. அதிக உணவு தேவைப்படுவதால் பெரிய வாழ்விடம் அவசியமாகிறது. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த அதன் வாழ்விடம் மனிதர்களின் ஆக்கிரமிப்பால் பெருமளவில் சுருங்கிப் போனது அல்லது துண்டாடப்பட்டுள்ளது. அந்த இடங்களை இப்போது நாம் பட்டா நிலம் , வருவாய்த்துறை நிலம் என்றெல்லாம் எழுதிக் கொண்டு சொந்தம் கொண்டாடினாலும் ஒரு காலத்தில் அவை யானைகளின் வாழ்விடமே.

மீதமிருக்கும் யானைகளின் காடும் தரம் குறைந்து போயுள்ளன. காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் வேளாண்மையும் மாறியுள்ளது. எனவே சில யானைகள் உணவுப் பயிர்களால் ஈர்க்கப்படுகின்றன. காட்டில் வெகுதூரம் அலைந்து தேடும் உணவு ஒரே இடத்தில் கிடைத்து விடுவதால் மீண்டும் மீண்டும் பயிர்களை மேய வந்து விடுகின்றன. அத்தகைய யானைகள் முதன்மையான பிரச்சனைக் குரியவையாகக் கருதப்படுகின்றன. காட்டிலுள்ள அனைத்து யானைகளும் அவ்வாறு வெளிவருவது இல்லை எனினும் பயிர் மேயப் பழகிய யானைகள் மற்ற யானைகளையும் பழக்கி விடும் நிலைமை ஏற்படுகிறது.

பயிர் சேதத்தை தவிர்க்க பல்வேறு வகைகளில் யானைகள் தடுக்கப்படுகின்றன அல்லது முடுக்கப்படுகின்றன. பட்டாசு ஏவி துரத்துதல், கற்களால் அடித்தல், காற்றழுத்த துப்பாக்கி தோட்டாக்களால் தாக்குதல் ( இப்போதும் அண்டை மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது) உள்ளிட்ட கொடூரமான துரத்து முறைகளால் பாதிக்கப்பட்ட யானைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. மனிதர்கள் மீது வெறுப்பு கொள்கின்றன. அதன் காரணமாகவே சில யானைகள் மனிதர்களைக் கண்டால் துரத்தித் தாக்கும் பழக்கமுடையவைகளாக மாறிவிடுகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கிய யானைகளில் சில உப்பு , அரிசி போன்ற உணவுகளால் ஈர்க்கப்பட்டு வீடுகளை உடைக்கின்றன. அத்தகைய யானைகளையே பிடிக்க வலியுறுத்தும் சூழல் ஏற்படுகிறது.

எனவே காடுகளைவிட்டு யானைகள் வெளியே வருவது தடுக்கப்பட வேண்டும். ஆனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மட்டுமே யானைகள் நடமாட வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் வாழ்விடங்களை இணைக்கும் வலசை பாதைகள் தனியாரிடமோ வேறு துறைகளிடமோ இருந்தாலும் யானைகள் கடந்து போவதை தடுக்காதவாறு அந்த நிலங்கள் பராமரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பிற இடங்களில் யானைகள் வெளியே வராமல் தடுக்க முடியும்.

இதற்கு வனத்துறை மட்டுமன்றி பல்வேறு அரசு துறைகளின் பங்களிப்பும் அவசியம் ஆகிறது. யானைகளின் வலசைப் பாதைகளில் கட்டடங்களை கட்டுதல், தடுப்பு வேலிகள் அமைத்தல், புதிய சாலைகள் அமைத்தல், பயன்பாட்டில் உள்ள காட்டு சாலைகளை யானைகள் கடந்து போகாதவாறு மாற்றி அமைத்தல், ரயில் பாதைகள் அமைத்தல், மின்சார, பாசன தேவைகளுக்காக பெரும் குழாய்கள் அமைத்தல் அல்லது பள்ளங்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் அவசியம் தடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய நில அமைப்பு மாற்றத்தை தடுக்க நம்மிடம் சட்டம் எதுவும் இல்லை. மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (Hill Area Conservation Authority) சில குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் அந்த விதிமுறைகளை மீறியும் ஏமாற்றியும் பல பெரும் கட்டடங்கள் எழுந்துள்ளன. புதிய கட்டிடங்களும் குடியிருப்புகளும் முளைத்துக் கொண்டே உள்ளன. நீதிமன்றங்களின் தலையீட்டால் மசினகுடி பகுதியில் மட்டும் யானைகளின் வலசை பாதையில் அனுமதி இன்றி கட்டப்பட்ட சில கட்டடங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் யானைகளின் அவசியமான வாழ்விடங்களிலும் பாதைகளிலும் கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட 42 யானைகளின் வலசைப் பாதைகளையும் அரசு உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.

காடுகளில் யானைகளுக்கு உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் பற்றிப் படரும் களைச்செடிகளை அகற்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும் இன்னும் கூடுதலாக அறிவியல் முறைப்படி போர் கால அடிப்படையில் அப்பணி நடைபெற வேண்டும்.

கூடலூர் பகுதியில் தீர்வு காணப்படாத ஜென்ம பூமி ( section 17) நிலங்களை கையகப்படுத்தி இப்போது குடியிருக்கும் மக்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கி மற்றவற்றை யானைகள் பயன்படுத்தும் காடுகளாக மாற்றப்பட வேண்டும். அந்த நிலம் தொடர்பாக நீதிமன்றங்களில் இருக்கும் தடைகளை சட்டரீதியாக நீக்க சிறப்பு வழக்கறிஞர், அறிஞர்கள், சூழலியலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

யானைகள் வெளியேறாமல் தடுக்க அமைக்கப்பட்ட அகழிகள் , மின்வேலிகள் ஆகியவற்றை பராமரிக்கும் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகள் , அரசின் பிற துறைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யானைகள் மிகுந்த அறிவுத்திறன் கொண்டவை. தமக்கு உணவு கிடைக்கும் எனில் எவ்வித தடைகளையும் மீறத் துணிபவை ( High gain high risk) . அவ்வாறு நுழையும் யானைகளை தடுக்க திறன்மிக்க களப்பணியாளர்கள் அவசியம் தேவை. எனவே தேவையான இடங்களில் கூடுதலான யானை விரட்டும் படை அமைக்கப்பட வேண்டும். தற்காலிக பணியாளர்களான அவர்களுக்கு கூடுதல் ஊதியம் மற்றும் அவசிய தேவைகளை வழங்க போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் யானையின் வருகையை அறிதல், தடுத்தல் ஆகிய முயற்சிகள் சில இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன. அந்த அனுபவங்களைக் கொண்டு பிற இடங்களுக்கும் அவை விரிவு படுத்தப்பட வேண்டும்.

பயிர் சேதம் ஏற்பட்டால் தாமதம் இன்றி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் சந்தை மதிப்பிற்கு உகந்தவாறு இழப்பீட்டுத் தொகை கூடுதல் ஆக்கப்பட வேண்டும். இழப்பீடட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை எளிதாக்கப்பட வேண்டும்.

காடுகளை ஒட்டிய விளைநிலங்களில் விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் மாற்றுப் பயிர்களை பரிந்துரைக்க வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மைத் துறை ஆகியவை முனைப்பு காட்ட வேண்டும்.

சாத்தியமான இடங்களில் யானைகளின் வலசைப் பாதைகளாக உள்ள தனியார் நிலங்களை நீண்ட கால ஒப்பந்தத்தில் வனத்துறை குத்தகைக்கு எடுக்க வேண்டும். நில உடமையாளருக்கு ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் இருக்க வேண்டும். அதனால் விவசாயிகளும் பயனடைவார்கள். யானைகளின் பாதைகளும் காப்பாற்றப்படும்.

காடுகளை ஒட்டி வாழும் மக்களும் யானைகளின் பரிதாப நிலை அறிந்து தம் முன்னோர்களைப் போல அவற்றோடு இயைந்து வாழும் மனநிலைக்கு வர வேண்டும்.

கோவை வனக்கோட்டத்தில் யானை – மனித முரண் மிகுந்துள்ள 42 கிராமங்களில் உள்ளூர் மக்களோடு நாங்கள் நடத்திய கலந்துரையாடலில் பெரும்பான்மையினர் யானைகளின் மீது கரிசனம் கொண்டே பேசினர். தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர். அரிதாகவே சிலர் யானைகளின் மீது வெறுப்புணர்வை காட்டினர்.

யானைகளால் தொடர்ந்து தொல்லைகளுக்கு உள்ளாகும் மக்களின் மனநிலையை நகரங்களில் இருந்து யானைகளுக்காக குரல் கொடுக்கும் இயற்கை ஆர்வலர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களின் பங்களிப்பு இல்லாமல் காட்டையும் காட்டுயிர்களையும் காப்பாற்ற இயலாது.

தொடர்ந்து காட்டை விட்டு வெளியே வரும் யானைகளை பல்வேறு தடுப்பு முறைகளை பயன்படுத்தியும் தடுக்க முடியாதபோது அவற்றை பிடித்தாக வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையெனில் யானைகளும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். காடுகளுக்கு வெளியே சுற்றித் திரிந்த பல யானைகள் மின்வேலியில் சிக்கி, பள்ளங்களில் விழுந்து, விபத்தில் அடிபட்டு இறந்து போய் உள்ளன.

தவிர்க்க முடியாத காரணங்களால் பிடிக்கப்படும் யானைகளை மீண்டும் காடுகளில் விட முடியாத சூழலில் அவற்றை வளர்ப்பு யானைகளாக பராமரிப்பதே யானைகளுக்கு உகந்தது ஆகும். வனத்துறை முகாம்களில் உள்ள யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டாலும் காடுகளில் சுற்றித் திரிய அனுமதிக்கப்படுகின்றன. முகாம்களில் கொடுக்கப்படும் உணவு மட்டுமின்றி கானகத்தில் இயற்கையான உணவும் அவற்றுக்கு கிடைக்கின்றன. காட்டு யானைகளுடன் முகாம் யானைகள் இணை சேர்வதும் உண்டு.

தமிழக கேரள எல்லையில் 26 பேரை கொன்று கேரளாவில் கண்டதும் சுட உத்தரவிடப்பட்ட மூர்த்தி யானை தமிழக வனத்துறையால் பிடிக்கப்பட்டு முகாம் யானையாக பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்ததை அறிவோம்.

அதேபோல் 8 பேர் மரணத்திற்கு காரணமான சீனிவாசன், 5 பேரை கொன்ற சங்கர், 7 பேர் மரணிக்க காரணமான அரிசி ராஜா ஆகிய யானைகள் முகாம்களில் இப்போது நலமுடன் இருக்கிறன.

யானை – மனித முரண் அதிகரித்து வரும் சூழலில் கும்கி யானைகளின் தேவையும் கூடுகிறது. பிடிக்கப்படும் யானைகள் அவ்வாறு பழக்கப்படும் வாய்ப்பும் ஏற்படும்.

முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்டு யானைகள் சில இறந்து போன நிகழ்வுகளும் உண்டு. கோவையில் பிடிக்கப்பட்ட மகாராஜா யானை கராலில் மோதி இறந்தது.

பிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் கூட யானைகளுக்கு மரணத்தை விளைவிக்கலாம்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக விளைநிலங்களில் பயிர்களை மேய்ந்து பழகிய யானைகளுக்கு அப்பயிர்களுக்கு தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எளிதில் கண்டறிய முடியாது.

பார்ப்பதற்குகொழுகொழு என்று இருந்தாலும் அவற்றின் உள்ளுறுப்புகளில் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளாலும் அவை இறந்து போகலாம். இவற்றைப் பற்றி எல்லாம் ஆராய தனியாக மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும்.

யானைகள் இறந்து போகும் தருணங்களில் காரணங்களை முழுமையாக ஆராயாமல் குறிப்பிட்ட வனக்களப்பணியாளகள் அல்லது அலுவலர்கள் மீது பழி சுமத்துவதும் அபத்தமானது. வனத்துறை உயர் அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், உயிரியலாளர்கள் ஆகியோர் இணைந்து ஆலோசித்தே பல முடிவுகள் கூட்டாக எடுக்கப்படுகின்றன. யானைகளை காப்பாற்றுவது மட்டுமே அந்த முடிவின் மையமாக இருக்கும். ஆனால் எதிர்பாராத மரணங்கள் ஏற்படும்போது அவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். உண்மையை உணராமல் அவர்களை விமர்சித்து காயப்படுத்துவது காட்டுயிர்கள் பாதுகாப்பிற்கு எதிராகவே அமையும்.

எதையோ மறைக்கிறார்கள் என்கிற சந்தேகம் எழாதவாறு வனத்துறையின் செயல்பாடுகளும் இன்னும் கூடுதலான வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும்.

யானைகளின் மரணத்தை தனித்தனியே பார்க்காமல் அவற்றின் வாழ்விட சிக்கல்களோடு இணைத்தே பார்க்கவேண்டும். யானைகளின் வாழ்விட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே
அவசர, அவசிய தேவையாகும்.

எனவே காட்டுயிர்கள்மீதான அக்கறையை உணர்வு பூர்வமாக மட்டும் வெளிப்படுத்தாமல் அறிவியல் பூர்வமாகவும் அணுக வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share