ஆட்சியின் பங்கு என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியில் பங்கு என்ற தனது நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக திமுகவில் மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஐ. பெரியசாமி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜனவரி 12) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கூட்டணி ஆட்சி குறித்து ஐ. பெரியசாமி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “எல்லோருக்கும் ஒரு கருத்து உண்டு. கருத்துரிமை உள்ளது. நாங்கள் எங்களுடைய கருத்தைச் தெரிவித்துள்ளோம். ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ. பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து. ஆட்சியில் பங்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இணைந்து முடிவெடுப்பார்கள்” என்றார்.
மேலும், “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இதற்கு தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று தெரிவித்தார்.
