மக்களவைக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்தால் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிப்ரவரி 4-ந் தேதி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளிக்க பிரதமர் மோடி இன்று மக்களவைக்கு வரமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். மக்களவைக்கு வரும் துணிச்சல் மோடிக்கு இருக்கும் என நான் நினைக்கவில்லை.
அப்படியே மக்களவைக்கு மோடி வந்தால் அவரிடம் நான் நரவானே எழுதிய இந்தப் புத்தகத்தை- ‘Four Stars of Destiny’ கொடுப்பேன். அவரிடம் இதை நேரில் கொடுத்து நீங்க படிக்க வேண்டும் என்று சொல்வேன். இந்தியாவின் இளைஞர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் இந்தப் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தப் புத்தகத்தை அச்சிட அனுமதிக்கவில்லை.
லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நரவானே இந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார். ஆனால் மக்களவையில் இந்தப் புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசுவதற்கு என்னை பாஜக அனுமதிக்கவும் இல்லை.
நாடு நெருக்கடியாக இருந்த தருணத்தில் பிரதமர் மோடி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ”ஜோ உசித் சம்ஜோ வோ கரோ” – எது உங்களுக்கு சரின்னு தோணுதோ அதை செய்யுங்க.. என்பதுதான்.
எல்லைக்குள் சீனா முன்னேறிய போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி நரவானே அழைக்கிறார். ஆனால் முதலில் ராஜ்நாத் சிங் பதில் தரவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என பலரிடமும் நரவானே கேட்டார்.. பதில் இல்லை.
ஒரு கட்டத்தில், ‘மேலிடத்தில்’ கேட்கிறேன் என ராஜ்நாத்சிங் பதில் சொன்னார். ஆனால் ‘மேலிடமான’ மோடியோ அனுமதி இன்றி சீன ராணுவம் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. ஆனால் நரவானே தாக்குதல் நடத்தவே விரும்பினார். அப்போதுதான் மோடி “ஜோ உசித் சம்ஜோ வோ கரோ” என சொல்லி இருக்கிறார்.. அதாவது “என்னால் எதுவும் சொல்ல முடியாது, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டார் மோடி.
இந்த தருணத்தைச் சொல்லும் நரவானே, ”மிகவும் தனிமையாக அப்போது உணர்ந்தேன், ஒட்டுமொத்த அரசாங்கத்தால் கைவிடப்பட்டவனாக உணர்ந்தேன்” என எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தைதான் மோடியிடம் தரப்போகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
