மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கறுப்பு உடையில் வருகை தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார்; பின்னர் குடியரசுத் தலைவர் உரை மீது விவாதங்கள் நடைபெற்று அதற்கு பிரதமர் பதிலளிப்பார். இது நாடாளுமன்ற நடைமுறை.
கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பேசிய போது, மக்களவைக்கு கறுப்பு உடையில் வந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்தார் ராகுல் காந்தி.
இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி, மக்களவையில் பதிலளிக்க உள்ளார். இன்று மோடி பதிலளிக்கும் நிலையில் இந்த ஆண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கறுப்பு உடையுடன் மக்களவைக்கு வருகை தந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மக்களவையில் ராகுல் காந்தியை ஆளும் பாஜக எம்.பிக்கள் பேசவிடாமல் தடுத்து வருகின்றனர்; இதனால் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்பிய 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பதிலளிக்க இருக்கும் போது கறுப்பு உடையில் ராகுல் காந்தி வருகை தந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் காத்திருந்த செய்தியாளர்களிடம் தாம் கொண்டு வந்த முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய “Four Stars of Destiny” புத்தகத்தை உயர்த்தி காட்டி ‘போஸ்’ கொடுத்தார். இந்தப் புத்தகத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து எழுதப்பட்டதை சுட்டிக் காட்டி மக்களவையில் ராகுல் காந்தி பேசியதால் பெரும் பிரளயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
