2025ஆம் ஆண்டு (ஆராய்ச்சிக்காக ஒரு கற்பனை), பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குகிறார்கள்.
டிசம்பர் 2001இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த முறை தாக்குதல்களில் இந்திய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 2002இல் நடந்ததுபோல, இரு தரப்பினரும் நாடுகளுக்கு இடையிலான எல்லையிலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் தங்கள் படைகளைத் திரட்டி நிறுத்துகிறார்கள்.
இரு பக்கமும் நிலவும் அதீதப் பதற்றங்கள் காரணமாக மோதல்கள் வெடிக்கின்றன. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள். இந்திய அரசாங்கம் பல தலைவர்களை இழந்ததால், இந்திய ராணுவம் தானாகவே செயல்பட முடிவுசெய்கிறது. டாங்கிகள் மூலம் பாகிஸ்தானுக்குள் எல்லையைக் கடந்து, காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு எனப்படும் நடைமுறை எல்லையைக் கடந்து செல்கிறது.
பாகிஸ்தான் ஜெனரல்கள் பீதியடைந்து, வலிமை வாய்ந்த இந்தியப் படைகளின் படையெடுப்பை முறியடிக்க ஒரே வழி அணு ஆயுதங்கள்தான் என்று முடிவு செய்கிறார்கள். அணு ஆயுதப் போரின் முதல் நாளில், அவர்கள் 10 போர்க்களத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சக்தி குறைந்த அணுகுண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றும் 5 கிலோ டன்கள் கொண்டவை.(ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் பாதிக்கும் குறைவான சக்தி கொண்டவை).
தங்கள் எல்லைகளுக்குள், குறைந்த உயரத்தில் இந்திய டாங்கிகள் மீது அவற்றை வெடிக்கச் செய்கின்றனர். இரண்டாவது நாளில், பாகிஸ்தான் மேலும் 15 அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய பிறகு, பாகிஸ்தான் இராணுவ இலக்குகளை அணு ஆயுதங்களால் தாக்கினால்தான் அது போரை நிறுத்தும் என்று இந்தியர்கள் கருதுகிறார்கள்.
இந்தியர்கள் பாகிஸ்தான் பயன்படுத்தியதைப் போன்ற 20 அணு ஆயுதங்களை வான்வழியில் வெடிக்கச் செய்கிறார்கள். இரண்டு பஹவல்பூரில் உள்ள பாகிஸ்தான் காரிஸன் மீதும், 18 பாகிஸ்தான் விமானநிலையங்கள், அணு ஆயுதக் கிடங்குகளுக்கு மேலேயும் வெடிக்கின்றன.
தொலைதூரப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தானின் ஆயுதங்களைப் போலல்லாமல், இவை மிகப்பெரிய அளவில் நெருப்பைப் பற்றவைக்கின்றன. 1945இல் அமெரிக்கா குண்டுவீசிய பின்னர் ஹிரோஷிமாவில் நடந்ததுபோலவும், 1906இல் சான் பிரான்சிஸ்கோவில் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயின் விளைவாக நடந்ததுபோலவும் பெருமளவிலான புகை மேல் வளிமண்டலம் வரை உயர்கிறது.

இந்தியாவின் தாக்குதல் பலனளிக்கவில்லை. பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துவதற்குப் பதிலாக, மூன்றாம் நாளில் 30 வான்வழித் தாக்குதல்களை – இந்திய நகரங்களில் உள்ள காவற்படைகள் மீது 20, நகர்ப்புறங்களில் உள்ள இந்தியக் கடற்படைத் தளங்கள், விமானநிலையங்கள் மீது 10 – பயன்படுத்துகிறது. இந்தியத் துருப்புக்கள்மீது மேலும் 15 அணு ஆயுதங்களை ஏவுகிறது. நகர்ப்புறங்களில் அமைந்துள்ள 10 பாகிஸ்தான் கடற்படை, இராணுவம், விமானப்படை தளங்கள்மீது இந்தியா அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்துகிறது.
இனி போரை நிறுத்த முடியாது. இரு தரப்பிலும் கோபம், பீதி, தவறான தகவல் தொடர்பு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை போருக்கான எரிபொருள்களாகின்றன. அடுத்த மூன்று நாட்களில், பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தின் மீதமுள்ள பகுதியைப் பயன்படுத்துகிறது, 120 ஆயுதங்கள் இந்திய நகரங்களை அழிக்கின்றன; இந்தியா மேலும் 70 வான்வழித் தாக்குதல்களுடன் பதிலளிக்கிறது. ஆனால் தன் ஆயுதக் களஞ்சியத்தில் 100 ஆயுதங்களை மீதி வைத்திருக்கிறது.
ஒருவேளை சீனா தன்னைத் தாக்கத் தொடங்கினால் அதை எதிர்கொள்வதற்காக அவற்றை வைத்திருக்கிறது. ஆனால், இந்திய அணு ஆயுதக் களஞ்சியம் பாகிஸ்தானுடனான போரைத் தடுக்கத் தவறிவிட்டது என்னும் சோகமான யதார்த்தத்தை அது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அது பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கங்களை உருவாக்கவிருக்கிறது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களை, ஏன் பில்லியன்களைக்கூட பாதிக்கக்கூடிய பஞ்சங்களை ஏற்படுத்தும். நாங்கள் முன்வைக்கும் இந்தக் கற்பனையான சூழ்நிலையில் 250 நகர்ப்புற இலக்குகளின் இருப்பிடங்களைப் படம் 1 காட்டுகிறது.
[படம் 1. இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் நடக்கும் நிலையில் நகர்ப்புற இலக்குகள். வெவ்வேறு நிறங்கள் போரின் வெவ்வேறு நாட்களைக் குறிக்கின்றன. முதல் நாளில் எந்த நகர்ப்புற இலக்கும் தாக்கப்படுவதில்லை. அடர்த்தியான நகர்ப்புறங்களில், சில புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் தெற்கு கடற்கரையில் உள்ள கராச்சியில்.]
அணு ஆயுதப் போர் நிகழ்வது சாத்தியமா? what happend if India-Pakistan nuclear war
காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய, பாகிஸ்தான் துருப்புக்களுக்கிடையே மோதல் ஏற்படும் என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. ஆனால், இதுபோன்ற மோதலால் இரு நாடுகளும் அணு ஆயுதப் போரைத் தொடங்க வாய்ப்பில்லை. பாகிஸ்தானைப் போல அல்லாமல், முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிக்கப்பட்ட கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. “வழக்கமான” போர் முறைகள் தோல்வியடைந்தால், தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவைப்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இந்த நாடுகள் நான்கு வழக்கமான போர்களை (1947, 1965, 1971, 1999) நடத்தியுள்ளன.

1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கணிசமான உயிரிழப்புகளுடன் பல மோதல்களைச் சந்தித்தன. 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில், காஷ்மீரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இந்தியா வான் வழியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இந்திய விமானங்களில் ஒன்று பாகிஸ்தானுக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது. நல்வாய்ப்பாக விமானி உயிர் பிழைத்தார். மேற்கொண்டு போர் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் இந்த நல்வாய்ப்பு எப்போதும் இருக்குமா?
2019, ஆகஸ்டில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. அதற்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க இந்தியப் படைகள் மாநிலத்தை முடக்கிவைத்தன. இன்றுவரை அங்கே நிலைமை பதற்றமாகவே உள்ளது. இந்தியா இப்பகுதியை இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கக்கூடும். அவை உள்ளூர் அரசாங்கங்களுக்குப் பதிலாக மத்திய அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படக்கூடும்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான அணு ஆயுதப் போரால் இந்நாடுகளிலும் உலக அளவிலும் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய, நாங்கள் அத்தகைய போரின் சாத்தியமான விளைவுகளை, அது எவ்வாறு தொடங்கலாம் என்பதற்கான அனுமானத்துடன் ஆராய்ந்தோம். மோதலின் தொடக்கம் அல்லது அதிகரிப்புக்கு எந்த ஒரு தரப்பின்மீதும் பழி சுமத்துவது எந்த வகையிலும் எங்கள் நோக்கமல்ல. இரு தரப்பிலும் மோசமான முடிவுகள் எடுக்கப்படாமல் அத்தகைய மோதல் நிகழாது. இரு நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள், பீதி, தகவல் தொடர்பு இழப்பு, அமைப்புகளைக் கண்காணிப்பதில் தொழில்நுட்பத் தோல்விகள், ஹேக்கிங் அல்லது மறு தரப்பு ராணுவத்தின் செயல்களைத் தவறாகப் புரிந்துகொள்வது ஆகியவற்றால் இந்த மோதல் அதிகரிக்கக்கூடும்.
ஆராய்ச்சிக்காக நாங்கள் முன்வைக்கும் கற்பனையான சூழலின்படி 2025ஆம் ஆண்டில் அணு ஆயுதப் போர் நடக்கிறது. இரு நாடுகளும் சுமார் 250 அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. பாகிஸ்தான் தனது அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும். சீனாவிடமிருந்து வரக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள இந்தியா தன்னிடத்தில் இருப்பவற்றில் 100 அணு ஆயுதங்களைச் சேமித்துவைக்கும். இந்தியா அணு ஆயுதங்களைத் தயாரித்ததற்கு முதன்மையான காரணம் சீனாதான்.
இந்த அணு ஆயுதப் பரிமாற்றத்தின் நேரடி விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்; 50 முதல் 125 மில்லியன் மக்கள் இறப்பார்கள் (ஒரு மில்லியன் = 10 இலட்சம்) என்று எங்கள் குழு மதிப்பிட்டுள்ளது. பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் 15, 50 அல்லது 100 கிலோ டன்களைக் கொண்டிருக்குமா என்பதைப் பொறுத்துச் சாவு எண்ணிக்கை மாறலாம். (ஒரு கிலோ டன் என்பது 1,000 டன் TNTயின் வெடிக்கும் சக்திக்குச் சமம்.) இந்திய, பாகிஸ்தான் சமூகங்களுக்கு இதன் விளைவுகள் மோசமானதாக, நீண்ட காலம் நீடிக்கக்கூடியதாக இருக்கும். பல முக்கிய நகரங்கள் பெருமளவில் அழிந்துபோய், வாழத் தகுதியற்றவையாகிவிடும். காயமடைந்த மில்லியன் கணக்கான மக்களுக்குக் கவனிப்பு தேவைப்படும். மின்சாரம், போக்குவரத்து, நிதி உள்கட்டமைப்பு ஆகியவை சீரழிந்து சின்னாபின்னமாகும்.
இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் போரினால் காலநிலையின் மீது ஏற்படும் விளைவுகள் துணைக்கண்டத்துடன் அல்லது ஆசியாவுடன் நிற்காது. அந்த விளைவுகள் மிகப்பெரியதாகவும் உலகளாவியதாகவும் இருக்கும்.
(கட்டுரையின் அடுத்த பகுதி நாளை)
கட்டுரையாளர்கள் :
ஆலன் ரோபோக் – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார்.
ஓவன் பி. டூன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் துறையிலும், வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான ஆய்வகத்திலும் பேராசிரியராக உள்ளார்.
சார்லஸ் ஜி. பார்டீன் – அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் உள்ள வளிமண்டல வேதியியல் அவதானிப்புகள் மற்றும் மாடலிங் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார்.
லில்லி சியா – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன் – வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பில் அணு தகவல் திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.
மேத்யூ மெக்கின்சி – அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ளஇயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலில் (NRDC) அணுசக்தி, காலநிலை மற்றும் எரிசக்தி திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.
ஆர். ஜே. பீட்டர்சன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.
செரில் எஸ். ஹாரிசன் – அமெரிக்காவின் டெக்சாஸ் ரியோ கிராண்டே வேலி பல்கலைக் கழகத்தின் பூமி, சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
நிக்கோல் எஸ். லவென்டுஸ்கி – கடல்சார் ஆய்வாளர் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார்.
ரிச்சர்ட் பி. டர்கோ – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நன்றி: டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ் ஆன்லைன்
தமிழில்: தேவா what happend if India-Pakistan nuclear war