கோவளம் முதல் நேப்பியர் பாலம் வரை… சென்னையில் வாட்டர் மெட்ரோ!

Published On:

| By Kavi

கொச்சியை போல சென்னையிலும் வாட்டர் மெட்ரோ கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் வாட்டர் மெட்ரோ போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.747 கோடியில் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டத்தின் மூலம் கொச்சி நகரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கடலில் உள்ள தீவுகளை இணைக்கும் வகையில் 11 தீவுகளுக்குச் சென்று ரசிக்கலாம். கேரள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே இந்த வாட்டர் மெட்ரோ வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று சென்னையிலும் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நீர்வளத் துறை (WRD) வாட்டர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், நீர்வளத் துறை மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“இதன் முதல்கட்டமாக கூவம் நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து தூர்வாரப்படும். தொடர்ந்து பல கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது, நீர் தர கண்காணிப்பு மற்றும் காற்றோட்ட அமைப்பு மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு ஆகியவை நிறுவப்படும். கால்வாயை மீட்டெடுப்பதற்கும் வாட்டர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கும் ரூ.3,000-5,000 கோடி செலவாகும். நிதி ஆதாரம் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். கால்வாயில் இருந்து வண்டல் மண் மற்றும் குப்பைகளை அகற்றுவது நீர் மெட்ரோவை இயக்குவதற்கு மட்டுமல்ல, மழை காலத்தின் போது வெள்ள பாதிப்பை தடுக்கவும் உதவும். வாட்டர் மெட்ரோ கொண்டு வருவதன் மூலம் வருவாயை ஈட்டுவதோடு, கால்வாயின் பராமரிப்பு செலவையும் ஈடுகட்ட முடியும். வாட்டர் மெட்ரோ அமைப்பதற்கான முன்மொழிவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அதைத் தொடர்ந்து, ஒரு வருடத்திற்குள் விரிவான திட்ட அறிக்கை முடிக்கக்கூடும்” என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share