ADVERTISEMENT

வக்ஃப் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு… முக்கிய அம்சங்கள் என்ன?

Published On:

| By christopher

Waqf case: What are the key features imposed by the SC in the interim order?

வக்ஃப் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 17) விதித்துள்ள இடைக்கால உத்தரவை ஏற்றுக்கொள்வதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். Waqf case: What are the key features imposed by the SC in the interim order?

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆ.ராசா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் எம்பி அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் என சுமார் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

விசாரணையின் முடிவில், “வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்கும் விதியை அமல்படுத்தியுள்ள மத்திய அரசு, இந்து அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதிக்குமா? என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நோக்கி தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், ”நீதிமன்ற தீர்ப்பாலோ அல்லது வேறுவிதமாகவோ பயன்பாடு அடிப்படையில் நீண்ட காலமாக இருக்கும் வக்ஃப் சொத்துகளை நீங்கள் எவ்வாறு பதிவு செய்வீர்கள்? அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்?

ADVERTISEMENT

அரசாங்கம் எழுப்பும் வக்ஃப் சொத்துகள் மீதான உரிமையை உறுதிப்படுத்தும் அதிகாரம் அரசு அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமானதுதானா?” என தலைமை நீதிபதி காட்டமாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து உச்ச நீதிமன்ற அமர்வு எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி இரண்டாம் நாள் விசாரணை இன்று தொடங்கியதும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை வைத்தார்.

குற்றச்சாட்டுக்கு தலைமை நீதிபதி பதிலடி!

அவர், ”வக்ஃப் சட்டத்தை நீங்கள் தடை செய்யப் போகிறீர்கள் என்றால் அது மிகவும் அரிதானதாகவே கருதப்படும். ஒரு சட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுத்தி வைப்பது என்பது ஒரு அசாதாரண நடவடிக்கை. ஆனால் அதற்கு முன்பாக இந்த சட்டத்தின் நோக்கம், கடந்த கால வரலாறு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். இது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றிக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது கிராமங்கள், தனியார் சொத்துக்கள் வக்ஃப் சொத்துக்களாக மாற்றப்பட்டு வருகின்றது. இது ஏராளமான அப்பாவி மக்களை பாதிக்கிறது” என மேத்தா வாதிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, “வக்ஃப் திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டினோம். சில நேர்மறையான விஷயங்களும் இருப்பதாக நாங்கள் கூறினோம். ஆனால் இன்று நிலவும் சூழ்நிலை மனுதாரர்களின் உரிமைகளைப் பாதிக்கும் அளவுக்கு கடுமையாக மாறுகிறது. அதனை நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றங்கள் வழக்கமாக சட்டங்களை நிறுத்தி வைக்க கூடாது என்ற முக்கிய விதி உள்ளது. நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, ​​பாதிக்கப்பட்ட நபர்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் விதி உள்ளது என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சுட்டிக்காட்டினார்.

இடைக்கால உத்தரவு!

வக்ஃப் சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையான அணுகு முறையை மேற்கொண்டு வருகிறது. வழக்கு தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க எங்களுக்கு ஒரு வாரகால அவகாசம் கொடுங்கள். இந்த ஒரு வார காலத்திற்குள் எதுவும் மாறிவிடப் போவதில்லை” என மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, மத்திய அரசு கொண்டுவந்த புதிய வக்ஃப் சட்டத்திற்கு ஒரு வார காலத்திற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்த உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை வரும் மே 5ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் மூலம் மத்திய அரசுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

🔷வக்ஃப் திருத்தச் சட்டப்பிரிவு 9 மற்றும் 14 இன் கீழ் மத்திய வக்ஃப் கவுன்சில்கள் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்.

🔷வக்ஃப் சொத்துக்களை அங்கீகரிப்பது அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க முடியாது.

🔷ஏற்கனவே வக்ஃப் முறை பதிவு செய்யப்பட்டோ அல்லது பதிவு செய்யப்படாமலோ எத்தகைய நடைமுறையில் தற்பொழுது உள்ளதோ அதுவே அடுத்த ஒரு வாரத்திற்கும் தொடரும் என உத்தரவில் தெரிவித்தனர்.

இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக துஷார் மேத்தா உச்சநீதிமன்ற அமர்வு முன்பு உறுதியளித்தார்.

மேலும் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவை அனைத்தையும் கையாள்வது சாத்தியமற்றது. எனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் 5 மட்டுமே முன்னணி மனுக்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கருதப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share