வாக்காளர் அடையாள அட்டை அட்வான்ஸ் புக்கிங் செய்யலாம்!

Published On:

| By Kalai

17 வயது நிரம்பியவர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்தால், 18 வது பிறந்த தினத்தில் வாக்காளர் அடையாள அட்டை பிறந்தநாள் பரிசாக வந்து சேரும் என இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினவிழா

ADVERTISEMENT

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா, சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் இன்று (ஆகஸ்டு 27) நடைபெற்றது.

இதில் இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே, மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா

நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு, “சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு நாடுகள் தேர்தல் நடத்துவதில் பலபிரச்சினைகளை சந்தித்தன. ஆனால் இந்தியாவில் அது போன்று எந்த பிரச்சனையும் வரவில்லை. அதனால்தான் தற்போது மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா உள்ளது. 1953 ஆம் ஆண்டில் 18 % வாக்குகள் தான்  பதிவாகின.  தற்போது 73 % வாக்குகள் பதிவாகிறது. 100 % வாக்குகள் பதிவு ஆகும் போது நாட்டின் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்” என்றார்.

ADVERTISEMENT

இளைஞர்கள் பங்களிப்பு முக்கியம்

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய தேர்தல் ஆணையர்  அனுப் சந்திரா பாண்டே, “இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். அந்த காலங்களில் வாக்காளர் பட்டியலில் பெண்கள் இவருடைய பெண், மனைவி என குறிப்பிட்ட காலங்கள் போய் தற்போது மொத்தமுள்ள வாக்காளர் பட்டியலில் 50%  பெண்கள் உள்ளனர்.

இந்தியாவில் மக்கள் 16% மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்த காலத்தில் வாக்காளர்களுக்கு சின்னம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜனநாயகம் வளர்க்கப்பட்டது. தற்போது இந்தியா மிகப்பெரிய ஜனநாயகமாக வளர்ந்துள்ளது.

ஒருவர் கூட விடுபடக்கூடாது

ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விடக்கூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு. உலகில் இளமையான நாடும் மற்றும் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடும் இந்தியா தான். வாக்காளர் பட்டியல் ஆண்டிற்கு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டு அளவில் வெளியிடப்படுகிறது.

ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளி வரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும். அதேபோல ஏப்ரல் ஜூலை அக்டோபர் ஆகிய மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்கப்படும்.

சினிமா டிக்கெட் முன்னரே பதிவு செய்து கொள்வது போலவே 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக தற்போது செய்து கொள்ள முடியும். 18 வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும்”  என்று தெரிவித்தார்.

கலை.ரா

ஆதார்-வாக்காள அடையாள அட்டை இணைப்பு: அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share