விமர்சனம்: ஆர்யன் -ஆக்கபூர்வமானவனா? ஆபத்தானவனா?-

Published On:

| By Minnambalam Desk

Aaryan Movie Review 2025

ராஜ திருமகன்

(முன் குறிப்பு: இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத நடுக்கமாக இருக்கிறது. படிக்கும் நீங்களும் அதன் பின்னர் பயப்படாமல் பாதுகாப்பாக இருக்கவும். காரணம் பிறகு !)

ADVERTISEMENT

தீய புத்தியோடு பல குற்றங்களைச் செய்தாலும் கண்மூடித்தனமான வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகன் ஒருவனை (உங்களுக்கு வேறு யாராவது ஞாபகம் வந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல) கான்ட்ரவர்சி இன்டர்வியூ எடுத்துக் கிழிக்க, ஒரு தொலைக்காட்சியின் செய்தியாளர் (கருணாகரன்) முயல,

இன்னொரு தொலைக்காட்சியின் கேள்வியாளர் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) நடிகனிடம் அனுமதி வாங்கி விடுகிறார்.

ADVERTISEMENT

கேள்வியாளர் மட்டுமின்றி அரங்கில் இருக்கும் பார்வையாளர்களும் கேள்வி கேட்க லைவ் ஆக ஒளிபரப்பாகும் பேட்டி அது.

எடுத்தவுடன் நடிகனை திக்கித் திணற வைக்கும் கேள்விகளோடு போக, பார்வையாளர் பகுதியில் இருந்து அழகர் (செல்வராகவன்) நடிகனை திட்டி, துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தி எல்லோரையும் மிரட்டுகிறார்.

ADVERTISEMENT

எல்லோரும் அதிர, போலீஸ் விரைந்து போக, உள்ளே அவர், அடுத்தடுத்து ஐந்து நாட்களுக்கு தினம் ஒருவராக என்னால் கொலை செய்யப்படுவார்கள், முதலில் நானே தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்லி தற்கொலை செய்தும் கொள்கிறார்.

இந்த சைக்கோ கொலைகளைப் பற்றி விசாரிக்க நம்பி என்ற போலீஸ் அதிகாரி (விஷ்ணு விஷால்) நியமிக்கப்படுகிறார். நம்பி எப்போதும் வேலை வேலை என்று இருப்பதால், இன்னும் ஒரு குழந்தைக்குக் கூடத் தாயாக முடியாத வருத்தத்தில் இருக்கும் அவரது மனைவி அனிதா (மானசா சவுத்ரி) விவாகரத்து வழக்குப போட்டு இருக்கிறார்.

Aaryan Movie Review 2025

நம்பி விசாரணையைத் துவக்க அடுத்த நாள் அசோக் என்ற முன்னாள் ராணுவ வீரர், டெலிபோன் பூத்தில் பாம் வெடித்துக் கொல்லப்படுகிறார். அடுத்த நாள் ரசியா என்ற பரத நாட்டிய மங்கை லிப்ஸ்டிக்கில் சயனைடு கலந்து கொல்லப்படுகிறார். அடுத்த நாள் யுவராஜ் என்ற சுற்றுச் சூழல் காப்பாளர் கடலுக்கடியில் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் கொல்லப்படுகிறார்.

ஒவ்வொரு கொலையையும் அழகர் பொது இடங்களில் உள்ள விளம்பர போர்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையே தானாக நுழையும் வீடியோ, வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ இப்படி அவர் தோன்றி பேசும்போது அன்று கொலை செய்யப்பட இருப்பவரின் பெயரையும் சொல்கிறார்.

நால்வரின் பெயரில் முதல் எழுத்தையும் சேர்த்தால் A A R Y என்று வருகிறது. அடுத்து இரண்டு எழுத்துக்களை சேர்த்தால் A A R Y A N என்று (படத்தின் பெயர்) வரும்.

அந்த A என்று துவங்கும் பெயர் கொண்ட நபர் போலீஸ் அதிகாரியின் விவாகரத்துக் கேட்கும் மனைவி அனிதாவா வேறு யாருமா?

கடைசியாக மீதமிருக்கும் N என்று துவங்கும் பெயர் கொண்ட நபர், போலீஸ் அதிகாரி நம்பியா அல்லது வேறு யாருமா? இந்த இரண்டு போரையும் போலீஸ் துறையால் காப்பாற்ற முடிந்தததா? இல்லை எனில் ஏன்? ஆம் எனில் நடந்தது என்ன? என்பதே …

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் சுப்ரா, மற்றும் ஆர்யன் ரமேஷ் தயாரிக்க, F.I.R படத்தை இயக்கிய மனு ஆனந்த் உடன் சேர்ந்து, திரைக்கதை எழுதி, பிரவீன்.கே கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆர்யன்.

நிதானமான ஸ்டைலிஷ் மேக்கிங். விஷ்ணு விஷால், செல்வராகவன், இருவரும் பாராட்டும்படி நடிக்கிறார்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன் இவர்கள் ஓகே. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்றபடி இருக்கிறது.. சண்டைக் காட்சிகள் ஓகே ரகம். இடைவேளை பகுதியில் ஜிப்ரானின் இசை பின்னி பெடல் எடுக்கிறது. ஆனால் இடைவேளைக்கு அப்புறம் அதையே வாசிக்காமல் இன்னும சிறப்பாக செய்து இருக்கலாம்.

உயிர்வாழ ஆக்சிஜன் முக்கியம்தான் எனினும், அதில் நைட்ரஜனும் இருக்க வேண்டும். நூறு சதவீத ஆக்சிஜனை சுவாசித்தால் உயிர் போய் விடும் என்பது உட்பட சில தகவல்கள் பாராட்டுக்கு உரியன.

செத்துப் போய்விட்ட ஒருவன் வரிசையாக மக்கள் முன் தோன்றி ஒரு மணி நேரத்தில் அடுத்த கொலை செய்யப் போகிறேன் என்று சொல்லி விட்டு செய்வது என்பது வித்தியாசமான கதை. அதற்கு ஏற்ப வழக்கமாக இந்த தேதியில் இவர் இதைச் செய்வார் என்று கண்டு பிடித்து அவர்கள் அந்தந்த நாளில் கொலையாகிச் சாக ஏற்பாடுகள் செய்து விட்டு அழகர் தொலைக் காட்சி லைவிலேயே தற்கொலை செய்துகொள்கிறார் என்பதும் கூட சுவையான விசயம்தான்.

ஆனால் அதை லாஜிக்காக சொல்வதில்தான் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்த்து இருக்கக் கூடாதா?

‘எப்படி பப்ளிக் டிஸ்ப்ளேயில் ஒருவன் முன்னரே புரோக்ராம் செய்து தோன்ற முடியும்? எப்படி டிவி சீரியல் ஓடும்போது இடையில் தனது வீடியோவை இணைத்து மக்களைப் பார்க்க வைக்க முடியும் என்பதற்கு எல்லாம் தொழில்நுட்ப வார்த்தைகளை சொல்லி நழுவாமல், மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக சொல்லி இருக்க வேண்டும்.

அது இல்லாத காரணத்தால் இடைவேளை முடிந்து படம் துவங்கும்போதே களைப்பு வருவது படத்துக்கு நல்லதா?

ஒரு காட்சி நடக்கும்போது இணையாக வேறு காட்சியைக் காட்ட வேண்டும் என்றால் அந்த காட்சியில் ஏதேனும் முக்கியமான சுவாரஸ்யமான விசயத்தில் நிறுத்தி, அடுத்த விசயத்துக்குப் போக வேண்டும். அதற்கு மாறாக டிவி நிலையத்துக்குள் அழகர் பிளாக்மெயில் செய்து பேசிக்கொண்டு இருப்பதையும், போலீஸ் டி வி சேனலுக்கு வந்து அழகரை பிடிக்க திட்டமிடுவதையும் மாற்றி மாற்றிக் காட்டும் விதம் சுரத்துக் குறைவது வருத்தமே.

Aaryan Movie Review 2025

வித்தியாசமான நல்ல கதைக்கு அட்டகாசமான காட்சிகளை அமைக்காமல் சும்மா வசனமில்லாத பின்னணி இசை கொண்ட காட்சிகள் மூலம் படத்தை நகர்த்துவதும் அதிலும் காட்டிய சம்பவங்களையே மீண்டும் மீண்டும் காட்டுவதும் நல்ல உத்தி இல்லை.

போலீஸ் அதிகாரி – மனைவி விவாகரத்து முயற்சியும் அப்புறம் நட்பும் இந்தப் படத்துக்கு எதாவது பயன் தருகிறதா என்ன? இது போன்ற தேவையில்லாத கதைப் போக்குகளும் முக்கியக் கதைப் போக்குகளும் இன்னும் சிறப்பாக இருப்பது அவசியம்.. கிளைமாக்ஸ் காட்சிகளில் எதிர்பாராத திருப்பம் என்று ஒன்று சொல்கிறார்கள்.

அநியாயம் அக்கிரமம். அராஜகம்.. இந்த வரிசையில் என்ன வார்த்தையை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

அதாகப்பட்டது, ஒருவர் மிகவும் நல்லவர். சமூகத்துக்காக தியாக மனப்பான்மையோடு உழைப்பவர். ஆனால் அவரை யாருமே மதிக்கவில்லை. அவரை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன் அதற்காக அவரது பெயரை ஊரறிய அறிவித்து விட்டு கொலை செய்கிறான். அவரைப் போல நல்லது செய்து மக்களால் மதிக்கப்படாத வேறு சிலரையும கொல்கிறான்.

அப்போதுதான் அந்த நல்ல சமூக சேவகர் யார் என்பதும் அவர்களது சமூக சேவையும் மக்களுக்கு தெரியவரும் . இனி அவர்களைப் போன்றவர்களை சமுதாயம் மதிக்கும். அதற்காக அவர்கள் செத்துப் போக வேண்டும்.

முந்தைய பத்தியில் அவர், அவர்கள் என்று சொல்லி இருக்கும் இடங்களில் உங்கள், நீங்கள் என்ற வார்த்தைகளைப் போட்டுப் பாருங்கள் உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த படத்தின் கிளைமாக்சுக்கு நீங்கள் சில்லறையை சிதற விடுவீர்கள்.

இப்படியே போனால் வியாபாரத்தை பெரிதாக நினைக்காமல் நல்ல படம் எடுப்பவர்கள், நன்றாக நடிப்பவர்கள் (விஷ்ணு விஷாலுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று வைத்துக் கொள்வோம்) உங்களை மாதிரி விமர்சனம் படிப்பவர்கள் எல்லோரையும் கொலை செய்ய ஓர் அழகர் கிளம்பி வந்தால் என்ன ஆகும்? (ஆரம்பத்தில் இருக்கும் முன் குறிப்புக்கு காரணம் புரியுதா?).

ஒரு புதிய படக் குழு ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக இப்படி ஒரு படம் எடுத்து இருந்தால் கூடப் பரவாயில்லை.

இத்தனை படங்களில் நடித்து பல படங்களை தயாரித்த விஷ்ணு விஷால் எப்படி இப்படி ஒரு கிளைமாக்சுக்கு ஒத்துக் கொண்டார்?

இந்தப் படத்தை இந்தியில் தயாரித்து நடிக்க விரும்பிய அமிர்கான், பின்னர் அந்த முயற்சியைக் கை விட்டதற்கான காரணம் போரடிக்கும் திரைக்க்கதையிலும் போட்டு அடிக்கும் கிளைமாக்ஸிலும் இருக்கிறது. முதலில் தயாரிக்க விரும்பியதற்கு காரணம் கதை இல்லை. அமிர்கான் மனைவியும் விஷ்ணு விஷால் மனைவியும் தோழிகளாம்).

ஆர்யன்.. இல்லை வீரியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share