கண்ணப்பா: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

இன்றைய ரசிகர்கள் ஏற்பார்களா?

‘ட்ரெய்லர்லயே முழுப்படத்தோட கதையைச் சொல்லிட்டீங்க. அப்போ படத்துல என்ன இருக்கும்’ என்று சமீபத்தில் அதிகளவில் ‘ட்ரோல்’ செய்யப்பட்டது ‘கண்ணப்பா’. அந்த படத்தின் ட்ரெய்லரில் உள்ளடக்கத்தில் இருந்த குறிப்பிட்ட விஷயங்கள் முன்வைக்கப்பட்டதே அதற்குக் காரணம்.

அதே நேரத்தில், சைவ மரபில் சொல்லப்படும் அறுபத்து நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்வைச் சொல்வதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், குறிப்பிட்ட அளவில் பக்தர்களை ஈர்க்கிற படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பும் உண்டானது.

தெலுங்கு நடிகர் மோகன்பாபு தயாரிப்பில், அவரது மகன் விஷ்ணு மஞ்சுவின் திரைக்கதையில், முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸ்ஸி இசையமைத்திருக்கிறார். vishnu manchu kannappa movie review minnambalam

விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், மோகன்பாபு, சரத்குமார், மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரமானந்தம், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கௌரவ தோற்றத்தில் வந்து போயிருக்கின்றனர்.

’கண்ணப்பா’ இப்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. தெலுங்கு படமான இது தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிடப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்ததற்கு ஏற்றவாறு இப்படம் வழக்கமான கதை சொல்லலைக் கொண்டிருக்கிறதா அல்லது ரசிகர்களை ஈர்க்கிற வகையிலான காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கிறதா? இப்படத்தைக் காண வரும் பக்தர்களுக்கு உகந்ததாக உள்ளதா?

’கண்ணப்பர்’ கதை!

வேடராகப் பிறந்த திண்ணன் சிவலிங்கத்தைக் கண்டு பூஜை செய்ததும், தான் உண்கிற மாமிசத்தைப் படைத்து வணங்கியதும், அதனைப் பார்த்த ஒரு வேதியர் ‘இது முறையல்ல’ என்று கொதித்தெழுந்ததும், பிறகு சிவலிங்கத்தில் இருந்த கண்களில் இருந்து ரத்தம் வடிந்ததைப் பொறுக்க முடியாமல் தனது கண்களைத் திண்ணன் பொறுத்தியதும், அதனால் அவர் ‘கண்ணப்பர்’ என்ற பெயரைப் பெற்றதும் ‘பெரிய புராணம்’மில் இருக்கிறது.

அந்தக் கதையின் முக்கிய அம்சங்களை எடுத்துக்கொண்டு, கடவுளை மறுதலிப்பவராக இருந்த திண்ணன் எப்படி அவரை வணங்கத் தொடங்கினார் என்று சொல்வதாக இப்படத்தின் திரைக்கதை வார்க்கப்பட்டிருக்கிறது. அதுவே இப்படத்தில் புதிது.

’அன்னமய்யா’, ‘ஸ்ரீராமதாசு’ ஆகிய பக்தி படங்களைத் தந்த இயக்குனர் கே.ராகவேந்திரராவ், வழக்கமாகத் தெலுங்கு மசாலா படங்களில் இருக்கிற சில ‘கமர்ஷியல்’ அம்சங்களை அவற்றில் இடம்பெறச் செய்திருந்தார். அந்த வழியில் ‘கண்ணப்பா’விலும் பாடல்கள், காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

’பாகுபலி’ பாணியில் இதில் காலமுகன் என்றொரு மூர்க்கனின் தலைமையில் பெரும்படையே திண்ணன் வாழுமிடம் நோக்கிப் படையெடுக்கிறது.

நெமிலி என்ற பெண்ணைக் கண்டதும் வாழ்வில் முதன்முறையாகக் காதல் கொள்கிறார் திண்ணன்.

இது போக, திண்ணன் எனும் மனிதர் கண்ணப்ப நாயனாராக மாறுவதற்குச் சில அதிசயங்கள் நிகழ்வதாகக் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ‘கண்ணப்பா’வில் இருக்கிற சில விஷயங்கள் இன்றைய தலைமுறையினரைக் கவர்கிற வகையில் ஆக்கப்பட்டிருக்கின்றன. சில அம்சங்கள் பக்தர்களைத் திரையரங்குகளுக்கு இழுக்கிற வகையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த ‘கலவை’யில் பலதரப்பட்ட ரசிகர்களுக்கு ஏற்ற அம்சங்கள் தேடித் தேடிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம் என்பதே ‘கண்ணப்பா’ குழுவின் எண்ணமாகத் திரையில் தென்படுகிறது.

அதேநேரத்தில், இந்த பல்வேறுபட்ட ரசிகர்கள் ஒரே நேரத்தில் இப்படத்தைக் கண்டு ரசிப்பார்களா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதற்கான பதிலை இதன் வெற்றி மட்டுமே சொல்ல முடியும்.

இலகுவான காட்சியமைப்பு!

தெலுங்கு திரையுலகில் சில நாயகர்கள் ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றியைத் தந்தாலும், சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அவர்களில் ஒருவராக விளங்கும் விஷ்ணு மஞ்சு, ‘கண்ணப்பா’ தன்னை ‘பான் இந்தியா’ ஸ்டார் ஆக்கும் என்று நம்பிக் களமிறங்கியிருக்கிறார். அதற்கேற்ற வகையில் படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

ப்ரீத்தி முகுந்தன் அறிமுகமாகிற படமாக இதுவே அமைந்திருக்க வேண்டும். ஆனால், பட உருவாக்கம் தாமதமான காரணத்தால் அவர் சில படங்களில் நாயகி ஆனார். இதில் வெவ்வேறு உடல்வாகோடு அவர் வந்தாலும், வசீகரிக்கிற வகையில் திரையில் வந்து போயிருக்கிறார்.

மோகன்பாபு, சரத்குமார் மற்றும் கௌரவ தோற்றத்தில் வருகிற மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வாலுக்கு இதில் சில ‘பில்டப் ஷாட்’கள் உண்டு. அவர்களது ரசிகர்களை அது மகிழ்விக்கலாம்.

இது போக மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரமானந்தம், பிரம்மாஜி, ரகு பாபு, தேவராஜ், ஐஸ்வர்யா, சம்பத்ராம், சிவபாலாஜி, அர்பித் ரங்கா என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராண, இதிகாசக் கதைகளைத் தொலைக்காட்சிகளில் தொடர்களாகப் பார்த்து வருபவர்கள், அவற்றுக்கென்று ஒரு ‘டெம்ப்ளேட்’ இருப்பதை உணர்வார்கள். பாத்திரங்கள் மெதுவாக வசனம் பேசுவது, அவற்றின் பின்னணியில் இசை ஒலிக்க இடம் அளிப்பது என்று அவற்றில் இருக்கிற சில விஷயங்கள் இந்த படத்திலும் உண்டு.

‘பாகுபலி’ போன்ற படங்களில் தமன்னா – பிரபாஸ் காதல் காட்சிகளைப் போலவே, இதில் விஷ்ணு மஞ்சு – ப்ரீத்தி சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை அழகியலுடன் உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டிப்பாகப் பாராட்டியே தீர வேண்டும்.

போலவே, பெரும்படையை நாயகன் ஒற்றையாளாகத் துவம்சம் செய்வதாக ‘வீடியோ கேம்’களில் இருப்பது போன்ற சண்டைக்காட்சிகளும் இதிலுண்டு.

இது போதாதென்று பூஜை, புனஸ்காரங்கள் தான் ஒருவரது பக்திக்கான அளவுகோலா என்று கேள்வி கேட்கிற இடங்களும் இதில் இருக்கின்றன.

விஷ்ணு மஞ்சுவின் திரைக்கதை வசனங்கள், ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு, சின்னாவின் தயாரிப்பு வடிவமைப்பு, ஆண்டனியின் படத்தொகுப்பு மற்றும் விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட அம்சங்கள் இந்த படத்தின் உள்ளடக்கத்தை மேற்சொன்னவாறு ஆக்கியிருக்கின்றன.

‘கண்ணப்பா’வில் ‘க்ளிஷே’வாக தெரிகிற காட்சியாக்கத்தை, இன்றைய தலைமுறையும் ரசிக்கிற வகையில், காண்கிற வகையில் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஸ்டீபன் தேவஸ்ஸி. பாடல்கள் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற மெலடிகளாக இருப்பது போலவே, காட்சிகளுக்கு அழுத்தம் தருகிற வகையில் பின்னணி இசை உள்ளது.  

அக்‌ஷய் குமார் – காஜல் அகர்வால் வருகிற காட்சிகள் ‘திருவிளையாடல்’ உள்ளிட்ட பல படங்களை நினைவூட்டுகின்றன. அவற்றை வேறு வகையில் காட்சியாக்கம் செய்ய முடியாது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஏற்கனவே சொன்னது போல, ‘கண்ணப்பா’ ட்ரெய்லரில் அதன் உள்ளடக்கத்தில் இருக்கிற முக்கியக் காட்சிகள் காட்டப்பட்டிருந்தன. அதையும் மீறித் திரையரங்குகளில் ஆவலோடு காண்கிற வண்ணம் இதன் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் முகேஷ் குமார் சிங்.

சண்டைக்காட்சிகளில் சில இடங்களில் வன்முறை அதீதம் ஆகியிருப்பதையும், நாயகியைக் கவர்ச்சியாகக் காட்டியதையும் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

இது போன்ற குறைகளைத் தாண்டி, ‘பக்தி படங்கள்’ எனும் வகைமையில் விஎஃப்எக்ஸின் பயன்பாட்டைக் கொண்டு இன்றைய ரசிகர்களும் ஏற்கிற வகையில் உள்ளது என்று சொல்லத்தக்க வகையில் உள்ளது ‘கண்ணப்பா’.

இது போன்ற பக்திப் படங்களில் சன்னதம், வேட்கை, வெறியாடல் கொள்ள வைக்கிற காட்சியமைப்பைப் புகுத்துகிற சாத்தியங்கள் அதிகம். அதனைத் தவிர்த்திருப்பதையும் பாராட்டத்தான் வேண்டும்.

கண்டிப்பாக, ’கண்ணப்பா’ அனைவருக்குமான படம் அல்ல. இதிலிருக்கிற சில விஷயங்கள், குறைகள் சிலரைச் சங்கடப்படுத்தும். அதேநேரத்தில், இக்கதையைக் காண வேண்டும் என்று திரையரங்குகளுக்கு ஆவலோடு வருவோரைத் திருப்திப்படுத்தும்..! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share