எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி… ஆனால் இன்று எப்படி இருக்கிறது என்று அதிமுக பெயரை சொல்லாமல் தவெக மாநாட்டில் விஜய் பேசியுள்ளார்.
மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், ”எம்.ஜி.ஆர் என்றால் யாருனு தெரியும்ல… அவரு உயிரோட இருக்கும் வரைக்கும் சிஎம் சீட்டை பற்றி ஒருத்தரால கூட நினைத்து கூட பார்க்க முடியல. மாஸ்ஸா இருந்தார்.
எப்படியாவது சிஎம் சீட்டை எங்ககிட்ட கொடுத்துருங்க… நண்பர் எம்ஜிஆர் திரும்ப வந்ததுக்கு அப்புறம் அந்த சீட்டை கொடுத்துவிடுகிறேன் என்று எதிரியை கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர்.
ஆனால், இப்போ அவரு ஆரம்பித்த கட்சிய கட்டி காப்பது யாரு… இன்னிக்கு அந்த கட்சி எப்படி இருக்கு… அதை நான் சொல்லிதான் தெரியனுமா என்ன? அக்கட்சி அப்பாவி தொண்டர்கள் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போடணும், யார் ஆட்சி அமையணுமென அந்த தொண்டர்களுக்கும் நல்லாவே தெரியும்.
எனவே, என்ன வேஷம் போட்டுக்கொண்டு பாஜக தமிழ்நாட்டுக்குள் வந்தாலும் அவர்களது வித்தையெல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது” என்று கூறினார்.
இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ‘கட்சி துவங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிட முடியாது. கடுமையாக உழைத்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நமது தலைவர் புகைப்படத்தை போட்டுத்தான் தொடங்க முடியும். நம்முடைய தலைவர் தோற்றுவித்த கட்சி ஏழை, ஒடுக்கப்பட்டவர்களுக்காக பல திட்டங்களை செய்து ஏற்றம் பெற்ற கட்சி’ என்று விஜய்க்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.