நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் சீனாவில் 40 ஆயிரம் ஸ்கீரின்களில் திரையிடப்படவுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா படத்தில் அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பிணைப்பை மிகச்சிறப்பாக காட்டியிருந்தார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மகாராஜா 18 நாட்களை கடந்த போதே சர்வதேச அளவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி விட்டது.
மகாராஜா இந்தியா முழுவதும் ஹிட்டடித்த நிலையில் ஓடிடியில் வெளியாகி உலக நாடுகளின் பாராட்டுகளை அள்ளியது.
இந்த நிலையில் தான் மகாராஜா படம் சீனாவில் வெளியாகவுள்ளது. அலிபாபா பிக்ச்சர்சுடன் இணைந்து யீஷி நிறுவனம் மகாராஜா படத்தை சீனாவில் ரிலீஸ் செய்கிறது. சீனாவில் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் இந்த படம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஸ்கீரின்களில் திரையிடப்படுகிறது.
இந்திய சினிமா இவ்வளவு திரையரங்குகளில் அங்கு வெளியிடப்படுவது கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தென்னிந்திய படங்களுக்கு நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மகாராஜா படம் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று விட்டால், மாநில மொழி படங்கள் தொடர்ந்து சீனாவில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் போன்ற பான் இந்தியா படங்கள் எடுக்கும் டைரக்டர்கள் சந்தையை விரிவுப்படுத்தும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்த படம் ஓடிடியில் வெளியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஜாவுக்கு முன்னதாக டங்கல், சீக்ரட் சூப்பர்ஸ்டார் ஆகிய படங்கள் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. டங்கல் படம் மட்டும் சீனாவில் 60 நாட்கள் ஓடி ரூ.1,305 கோடியை வசூலித்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மும்பையில் குறைந்த வாக்குப்பதிவு : பாடகி ஆஷா போஸ்லே கோரிக்கை!