நிறைய பொய்கள்… களம் நமக்கு ரெடி… பூத் கமிட்டிக் கூட்டத்தில் விஜய்

Published On:

| By Selvam

கோவை குரும்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டிக் கூட்டம் இன்றும் நாளையும் (ஏப்ரல் 26, 27) நடைபெறுகிறது. vijay says we will win

இன்று நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தவெக தலைவர் விஜய் பேசும்போது, “பூத் கமிட்டி கூட்டம் என்றாலே, ஓட்டு சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கும் மீட்டிங் கிடையாது.

நாம் தேர்தல் அரசியலில் தானே இருக்கிறோம். இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதில் தவறில்லை. ஏனென்றால், ஆட்சி அதிகாரம் என்றாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது தான்.

ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறோம்? நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காக தான். மக்களுடைய நலனுக்காக தான்.

இந்த பூத் லெவல் பயிற்சி பட்டறையில், மக்களிடம் இருந்து எப்படி ஓட்டு வாங்கப்போகிறோம் என்பதை பற்றி மட்டுமே, பேசப்போகிற ஒரு பயிற்சி பட்டறை கிடையாது. மக்களோடு நாம் எப்படி கனெக்டாக இருக்கப் போகிறோம்? மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணையப் போகிறோம்? என்பதைப் பற்றி ஆலோசனை செய்வதற்காக தான் இந்த பயிற்சி பட்டறை.

இதற்கு முன்பாக நிறைய பேர் வந்திருக்கலாம், போயிருக்கலாம். நிறைய பொய்களை சொல்லியிருக்கலாம். மக்களை ஏமாற்றியிருக்கலாம். இதையெல்லாம் செய்து ஆட்சியை பிடித்திருக்கலாம். அதெல்லாம் பழைய கதை. அதற்காக நான் இங்கே வரவில்லை. இனிமேல் அதெல்லாம் நடக்காது. நடக்கவிடப்போவதும் கிடையாது.

நமது கட்சி மீது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொண்டு வரப்போவதே, தேர்தல் களப்பணியில் பூத் லெவல் ஏஜெண்டுகளான நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போர் வீரனுக்கு சமம். நாம் ஏன் கட்சி ஆரம்பித்தோம்? என்பதை மக்களிடம் சென்று சொல்லுங்கள்.

உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது என்று கேட்பார்கள். நம்மிடம் மனதில் நேர்மை இருக்கிறது. கறைபடியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

லட்சியம் இருக்கிறது. உழைக்க வேண்டும் என்ற தெம்பு இருக்கிறது. பேசுவதற்கு உண்மை இருக்கிறது. செயல்படுவதற்கு திறமையும், அர்ப்பணிப்பும், குணமும் இருக்கிறது. களம் ரெடியாக இருக்கிறது. கான்ஃபிடன்ட்டாக போய் கலக்குங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்தார். vijay says we will win

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share