தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ள நிலையில், போலீசார் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரை பார்க்க ரசிகர்களும்,தொண்டர்களும், பொதுமக்களும் அதிகளவில் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
விஜய் கரூரில் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுவிட்டார். திருச்சி விமான நிலையத்தில், ‘30 பேர் செத்துட்டாங்களே’ என செய்தியாளர்கள் விஜய்யிடம் கேள்வி எழுப்பிய போதும் அவர் பதிகளிக்கவில்லை.
சம்பவம் நடந்து 3 நாட்கள் பிறகு வீடியோ ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தார். இந்தசூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்திக்கும் போது, வீடியோ காலில் வரும் விஜய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் கூறி வருகிறார். அப்போது காவல்துறை அனுமதி கொடுத்தவுடன் நேரில் வந்து பார்ப்பதாக விஜய் சொன்னதாக அவருடன் போனில் பேசியவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் கரூரில் இன்று (அக்டோபர் 8) செய்தியாளர்களிடம் பேசிய அருண் ராஜ், ‘விஜய் கரூர் சென்று மக்களை சந்திப்பதற்காக அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக நேற்று கடிதம் அனுப்பப்பட்டது. இன்று தவெக சார்பில் நேரில் சென்றும் அனுமதி கேட்கப்படும். இதற்கிடையே இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நேற்று முன்தினமும், நேற்றும் வீடியோ கால் மூலம் விஜய் பேசினார். நான் உங்களுடன் இருப்பேன், விரைவில் நேரில் சந்திக்கிறேன் என்றார்.
அப்போது, உங்கள் மேல் தப்பு இல்லை… நீங்கள் தைரியமாக இருங்கள், தொடர்ந்து போராடுங்கள் என எல்லோரும் சொன்னார்கள். என்ன நடந்திருக்கும் என்று மக்களுக்கும் சில நம்பிக்கைகள் இருக்கிறது. இந்த நேரத்தில் அரசின் நடவடிக்கை மீது கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று கூறினார்.
இந்தசூழலில் இன்று மதியம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் விஜய் கரூர் செல்ல அனுமதி பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார் தவெக வழக்கறிஞர் அறிவழகன்.
அப்போது போலீசார் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.
‘கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் மக்களை அழைத்து வந்து சந்திக்கலாம்.
அப்போது ரசிகர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து 5 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதன்படி மொத்தமாக சுமார் 205 பேர் மட்டுமே அழைத்து வரப்பட வேண்டும்
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஐடி கார்டு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
இவர்களை தவிர வேறு யாரையும் கண்டிப்பாக உள்ளே விடக் கூடாது’ என போலீஸ் தரப்பில் நிபந்தனைகள் விதித்திருக்கிறார்கள்.
தவெக தரப்பில், மீடியாவை மண்டபத்துக்குள் அனுமதிக்க கூடாது என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு போலீசார், அதை நீங்களே அவர்களிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறியதாக தகவல்கள் வருகின்றன.
எனினும் இன்னும் கருர் செல்வதற்கான தேதி குறித்து முடிவு செய்யப்படவில்லை. போலீசார் தரப்பிலும், தவெக தர்ப்பிலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
அதன்படி, விரைவில் விஜய் கரூர் செல்வார் எனவும் அப்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் இழப்பீட்டை தனது கையிலேயே வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.