ADVERTISEMENT

கரூர் பெருந்துயரம் – எஸ்ஐடி விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆதவ் அர்ஜூனா

Published On:

| By Kavi

கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து ஆதவ் அர்ஜூனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழக மக்கள் மனதில் நீங்கா வடுவாக உள்ளது. தங்களது உறவுகளை, குழந்தைகளை பறிகொடுத்தவர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறி வருகிறார்.

ADVERTISEMENT

இதற்கிடையே கரூர் துயரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், தமிழக வெற்றிக் கழகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

இதன்பேரில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் வேலுசாமிபுரத்தில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் தவெக தேர்தல் பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 8) மேல் முறையீடு செய்துள்ளார்.

அதில், கரூர் சம்பவத்தில் உண்மை வெளிவர வேண்டுமென்றால் எஸ்.ஐ.டி குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க தவெக சார்பில் தலைமை நீதிபதி முன் முறையிடப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

முன்னதாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் இருவரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வந்தன.

ஆனால் இவர்கள் மனு தாக்கல் செய்ததற்கான எந்த பதிவும் உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இல்லை என நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share