“வரும் அக்டோபர் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் காசா போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 8) தெரிவித்துள்ளார்.
காசா மீது இனப் படுகொலைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என 66,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இன்று அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. பன்னாட்டு உரிமைச்சட்டங்கள், ஐநாவின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறி நடத்தப்படும் இந்த தாக்குதலை கண்டிக்கிறோம்.
பாலஸ்தீனத்திற்கு நமது மனிதாபிமான ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் அத்துமீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐநா ஊழியர்கள் என 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். கடந்த ஓராண்டில் காஸாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் போராடி வருகிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் உணவுக்காக காத்திருந்த 40 பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்றது இஸ்ரேல் ராணுவம். சமீபத்தில் காஸாவுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் ஏற்றி சென்ற கப்பல்களுடன் 47 தன்னார்வலைகளை இஸ்ரேல் அரசு கைது செய்தது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.
வரும் அக்டோபர் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும், காசா போரை நிறுத்தக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பார்கள் என நான் கருதுகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
