திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும். இனி வரும் ஒவ்வொரு கார்த்திகையின் போதும் தீபம் ஏற்ற வேண்டும் என இன்று (ஜனவரி 6) உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என அனுமதி கோரி கடந்த நவம்பர் மாதம் ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தமிழக அரசு தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. வழக்கமான மரபுகளின் அடிப்படையில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றியது.
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்தும் 20க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இரு தரப்பினருக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது; சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தீபம் ஏற்ற முடியாது என்று அரசு கூறுவது நகைப்புக்குரியது; மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை முறையாக கையாளவில்லை என விமர்சித்தனர்.
மேலும், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு கார்த்திகையின் போதும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்; தீபம் ஏற்றும் போது கோயில் நிர்வாகம் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது; திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் எனக் குற்றம் சாட்டினர். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவது அர்த்தமற்றது எனத் தெரிவித்தனர்.
அதேபோல், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் உரிய விதிகளைப் பின்பற்றி தீபம் ஏற்றுவதை தமிழ்நாடு தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
