விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.
தமிழரின் கலாசாரம், பண்பாட்டுக்கு எதிரானது பிக்பாஸ் நிகழ்ச்சி; இதனால் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், அநாகரீகமான உடல் அசைவுகள், முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் இடம் பெறுகின்றன; இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்க்க முடியாது; குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் இந்த நிகழ்ச்சி தவறான வழிகாட்டுதலைத் தருகிறது என்பதும் தவாகவின் குற்றச்சாட்டு.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தவாகவின் மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்துக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் தவாக தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வெளி உலகத் தொடர்புகள் இல்லாமல் ஒரு வீட்டுக்குள் வாழும் நபர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தக் கூடியது பிக்பாஸ். விஜய் டிவியில் இதுவரை 9 சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளன. இதில் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த சீசனையும் தற்போதைய சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
