நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் கடைசியாக நடிக்கும் படம் ‘ஜனநாயகன்’. இது விஜய்யின் 69ஆவது படமாகும். அடுத்ததாக முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
எனவே, விஜய்யின் கடைசி படம் என்பதால் ‘ஜனநாயகன்’ குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிளை, பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் இன்று (நவம்பர் 8) மாலை வெளியிட்டுள்ளது.
இப்பாடலை நடிகர் விஜய், அனிருத் மற்றும் ராப் பாடகர் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலில் ‘பறக்கட்டும் நம்ம கொடி’, ‘சாதி, மதம் லேதய்யா’ போன்ற வரிகள் விஜய்யின் அரசியல் நோக்கங்களை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளன. குறிப்பாக சாதி, மதம் லேதய்யா வரிகள் வரும்போது, காரல் மார்க்ஸ், பெரியார், அம்பெத்கரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
லிரிக்கல் வீடியோவில், நடன இயக்குநர் சேகர் வடிவமைத்த ஹூக் ஸ்டெப்களும் இடம்பெற்றுள்ளன. விஜய்யுடன் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜுவும் இணைந்து நடனமாடியுள்ளனர்.
விஜய்யின் கடைசி படம் என்பதை உணர்த்தும் வகையில் பாடலின் இறுதியில், ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ என்று கூறுவதும் இடம்பெற்றுள்ளது,
இப்பாடல் வெளியாகி 42 நிமிடத்தில் 12.80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
