“விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம், விஜய் டி.வியை முற்றுகையிடுவோம்” என தவாக தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளுள் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி உள்ளது. 8 சீசன்களை கடந்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் சபரி, கனி, ஆதிரை, இணைய பிரபலங்களான விஜே பார்வதி, அரோரா, சுபிக்ஷா, ஃப்ஜே, திவாகர், கலையரசன் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு எதிராக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
அதன்பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் அவர் அளித்த பேட்டியில், “விஜய் டி.வியில் தமிழர்களின் பண்பாட்டை கெடுக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, வருமானம் ஒன்றுதான் என்ற நோக்கத்தில் ஸ்கிப் ரைட்டர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மனைவி, பிள்ளைகள், தாய் தந்தையுடன் பார்க்க முடியாத அருவருக்கக்கூடிய காட்சிகள் அதில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த அசிங்கமான நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி தான் விஜய் டிவி பணம் சம்பாதிக்க வேண்டுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ஜனநாயக ரீதியாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறேன். சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளேன். 2 நாட்களுக்கு முன்பு முதல்வருக்கும் இது தொடர்பாக அறிக்கை அனுப்பியிருந்தேன்.
ஆனால் இரண்டு நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும். கர்நாடகா, கேரளா போலத் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம், விஜய் டி.வியை முற்றுகையிடுவோம்” என எச்சரிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்றைய பிக்பாஸ் எபிசோடில், திவாகருக்கு, அரோரா பிக் பாஸ் வீடுக்கும் சூப்பர் டீலக்ஸ் வீடுக்கும் இடையே உள்ள கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.