நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். அதன்பின்னர் சூர்யா, தனுஷ், ரவிமோகன் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அதே சமயம் தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான பிரியங்கா, சமீபத்தில் வெளியான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ‘They Call Him OG’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது ஆபாச புகைப்படங்கள் சமூக வலைத்தங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இதனையறிந்த பிரியங்கா மோகன், அவை AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் என தனது எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதில், “என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கும் சில AI ஆல் உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்த போலி காட்சிகளைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள். AI என்பது தவறான காரியங்களுக்கு பயன்படுத்தாமல், நெறிமுறைகளுடன் கூடிய படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்கள் தலையிட வேண்டும்!
இதனையடுத்து, அவரது ட்விட்டை சுட்டிக்காட்டி ஒரு ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில் , “AI இன் கட்டுப்பாடற்ற பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களில், கையை மீறிச் செல்வது தெரிகிறது. அரசாங்கங்கள் தலையிட்டு இதுபோன்ற செயல்களுக்கான விதிமுறைகளையும் தண்டனைகளையும் வரையறுக்க வேண்டும்.
செயற்கையான புகைப்படம் என சொல்ல முடியாத அளவிற்கு ஏஐ-ஆல் புகைப்படங்களை உருவாக்க முடியும். அதற்கு பிரியங்காவின் இந்த புகைப்படங்கள் ஒரு சரியான எடுத்துக்காட்டு. இதில் யாராவது விழித்தெழுந்து விரைவில் விதிமுறைகளைக் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
