தமிழ்நாட்டில் ஒரே கட்ட வாக்குப் பதிவு நடத்த வேண்டும்; அதிக இடைவெளி இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு தலைமைத் தேர்தல் ஆணையரும் மற்ற ஆணையர்களும் இன்று (பிப்ரவரி 26-ந் தேதி) சென்னை எம்.ஆர்.சி.நகர் லீலா பேலஸில் கலந்தாலோசனை நடத்தினர். விசிக சார்பில் நானும் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குணவழகனும் பங்கேற்றோம்.
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் விசிக சார்பில்,
- தமிழ்நாட்டில் ஒரே நாளில் வாக்குப் பதிவு நடத்தவேண்டும்
- வாக்குப் பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடையே அதிக இடைவெளி கூடாது.
- தேர்தல் பரப்புரை காலம் 15 நாட்களுக்குமேல் இருக்கக்கூடாது.
- தேர்தல் காலத்தில் தலைவர்களின் சிலைகளை மூடுவதோ, அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதோ கூடாது- எனத் தெரிவித்தோம்.
வாக்குச் சாவடி முகவர்கள் 17C படிவத்தை ஒப்படைப்பதைக் கட்டாயமாக்கி விட்டோம். அதன் ஒரு பிரதி வாக்கு எண்ணிக்கை முகவரிடமும் தரப்படும். எனவே இனி அத்தகைய குற்றச் சாட்டுகள் எழாது எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

தேர்தல் அறிவிப்புக்கும் தேர்தல் முடிவு அறிவிப்புக்கும் இடையே இருக்கும் காலம் ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் தீர்மானிக்கப்படுகிறது என அவர் கூறினார்.
வெறுப்புப் பிரச்சாரம் செய்தால் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் எனக் கூறியபோது தேர்தல் விதிகளை மீறக்கூடாது என்பதற்குள் அதுவும் வந்துவிடும் எனத் தெரிவித்தார். சிலைகள், கொடிக்கம்பங்கள் விஷயத்தைப் பரிசீலிக்கிறோம் என்றார். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
