கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு நேற்று உடல் நலக் குறைவால் தனது 101ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை முதல் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று (பிப்ரவரி 26) பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டிருந்த பாலன் இல்லத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் தோழர் நல்லகண்ணுவிற்கு வீர வணக்க முழக்கங்களை எழுப்பி மரியாதை செலுத்தினார்.
வீரவணக்கம் முழக்கமிட்ட முதல்வர்
வீர வணக்கம்.. வீர வணக்கம்..
தகைசால் தமிழருக்கு வீரவணக்கம்
வீர வணக்கம்.. வீர வணக்கம்..
தகைசால் தமிழருக்கு வீரவணக்கம்
வீர வணக்கம்.. வீர வணக்கம்..
போராளிக்கு வீர வணக்கம்..
வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்..
செவ்வணக்கம்.. செவ்வணக்கம்..
வாழ்நாள் போராளிக்கு செவ்வணக்கம்.. என முழக்கங்களை எழுப்பினார்.
முதல்வரின் வீர வணக்க முழக்கத்தை தொடர்ந்து கி.வீரமணி, திருமாவளவன், செல்வப்பெந்தகை, வைகோ, டி.ராஜா, மு.வீரபாண்டியன் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் அங்கிருந்த தொண்டர்களும் வீர வணக்க முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, நல்லகண்ணுவின் விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு (மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி பயன்பாட்டுக்காக) ஒப்படைக்கப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
