தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வரப்போகிறார்கள் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”உச்ச நீதிமன்றம் கரூர் பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம், நாங்களும் இதை எங்களின் கோரிக்கையாக வைத்திருந்தோம்.
கரூரில் நடந்ததை விபத்து என ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசும்பொழுது நடந்ததாக கூறப்படும் பல்வேறு விஷயங்கள் மிகப்பெரிய சந்தேகத்தை மாநில அரசின் மீது உருவாக்கி இருக்கிறது.
அரசாங்கத்தின் சார்பில் ஏற்படுத்தியிருக்கிற ஒரு நபர் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்பதை எங்கள் மாநில தலைவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
சிறப்பு விசாரணை குழு எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கின்றார்கள்.
தமிழக காவல்துறை முழுவதுமாக தோல்வி அடைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியை கொடுத்து இருக்கிறது.
தமிழக காவல்துறையின் மீதான நம்பிக்கை என்பது தமிழக மக்களுக்கு சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு முழு திறன், முழு சுதந்திரம் என்பது இல்லை என்பதற்கு இந்த திராவிட மாடல் ஆட்சியில் நூற்றுக்கணக்கான சம்பவங்களை சொல்ல முடியும். சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிக் கொண்டு வரப்படும். சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதிகாரத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என்பது உண்மை” என்றார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவை சிபிஐ என விஜய் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா, அவர் அதை பாலோ பண்ணட்டும் என்றார்.
சிபிஐ மூலமாக தவெக விஜய்யை பாஜக கன்ட்ரோலில் எடுக்கின்றதா என்ற கேள்விக்கு, இதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சிபிஐ கன்விக்சன் ரேட் என்பது வழக்கு விசாரணையை பொறுத்தது. இதை தாண்டி என்ன செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து விரைவாக நீதி கிடைப்பதற்கு அவர் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அவரை மட்டுப்படுத்தவும் மத்திய ,மாநில அரசுகள் முயற்சிக்கின்றதா என்ற கேள்விக்கு, ஒரு ஜனநாயக அமைப்பில் கட்சி துவங்குவதற்கும், கட்சி செயல்படுவதற்கும் எல்லாருக்கும் உரிமை உண்டு. நெருக்குதல்களை சந்திக்கும் பொழுதும், அவர்கள் நெருக்கடியை தாண்டி பிரச்சனை வரும் பொழுதும் அதன் தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றவர், இப்படி ஒரு சூழல் தமிழகத்தில் இருக்கின்றது என்ற எதார்த்தத்தை பார்க்க வேண்டும். ஒரு கூட்டத்தில் கொடுக்க வேண்டிய பாதுகாப்புகளை அரசு கொடுக்காமல் விட்டதால் இது போன்ற விஷயங்கள் நடக்கிறது என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு,தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வரப்போகிறார்கள் என்றார்.
ஸ்ட்ராங்கான ஆட்கள் என்றால் அது விஜய்யா என்ற கேள்விக்கு, நீங்கள் ஸ்ட்ராங்கான ஆள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வைத்துக் கொள்ளுங்கள் எனவும் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
நீங்கள் வீசிய வலை விஜய்க்கா என்ற கேள்விக்கு, நாங்கள் வலை எல்லாம் விசுவதில்லை எனவும் சிரித்தபடி அவர் பதில் அளித்தார்.