கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசனின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து தவெக சார்பிலும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டது.
அந்த விசாரணையை மேற்பார்வை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது.
மேலும் எஸ்.ஐ.டி குழு இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தவிட்டது.
எனினும் அரசு அமைத்த முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணைய விசாரணை தொடரும் என்று அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வில்சன் கூறினார்.
இந்தசூழலில் ஒரு நபர் ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலில், ’27.9.2025 அன்று கரூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு (எப்.ஐ.ஆர் எண் : 855/2025) சிபிஐக்கு மாற்றப்படுகிறது.
விசாரணையை மேற்கொள்ள ஒரு மூத்த அதிகாரியை சிபிஐ இயக்குநர் உடனடியாக நியமித்து, அந்த அதிகாரிக்கு உதவ வேறு சில அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

கரூர் டவுன் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல் ஆய்வாளர், தனி நீதிபதியின் உத்தரவுபடி அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி குழு மற்றும் முதல்வரால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் ஆகியவை உடனடியாக வழக்குத் தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் என அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதால் ஒருநபர் ஆணையம் மற்றும் எஸ்.ஐ.டி குழு சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், தமிழக காவல்துறை ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள், மாநில சிறப்புப் விசாரணை குழுவின் பாரபட்சமற்ற விசாரணை குறித்து குடிமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
