அமெரிக்காவின் கிரீன் கார்டு, உலகெங்கிலும் உள்ள ஏராளமான இளைஞர்களின் கனவாகத் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பொருளாதார வளர்ச்சியையும் நிதி பற்றாக்குறையைத் தீர்க்கவும், புதிய ‘கோல்ட் கார்டு’ (Gold Card) விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான குடியேற்ற முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இளைஞர்கள் உட்பட, பலரிடையே இது ஆழமான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிரீன் கார்டு:
அமெரிக்காவின் கிரீன் கார்டு (Green Card), அதிகாரப்பூர்வமாக ‘பெர்மனென்ட் ரெசிடென்ட் கார்டு’ (Permanent Resident Card) என்று அழைக்கப்படுகிறது. இது அமெரிக்க அரசால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பு அட்டையாகும், இதன் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வசித்து, வேலை செய்யும் உரிமையைப் பெறுகின்றனர். இவர்கள் ‘லீகல் பெர்மனென்ட் ரெசிடென்ட்ஸ்’ (Legal Permanent Residents – LPRs) என்று அழைக்கப்படுகின்றனர்.
கிரீன் கார்டு பெறும் வகைகள்
ஒருவர் குடும்ப அடிப்படையிலும், முதலீட்டு அடிப்படையிலும், வேலைவாய்ப்பு அடிப்படையிலும், மற்றும் மற்றவை என்ற தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க குடியேற்றத் துறை (USCIS) இன் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின் படி கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
முந்தைய EB-5 திட்டம், 1990களில் தொடங்கப்பட்டு, 2022ல் ‘EB-5 ரிஃபார்ம் அண்ட் இன்டெக்ரிட்டி ஆக்ட்’ மூலம் மேம்படுத்தப்பட்டது. இது கிராமப்புறங்கள் மற்றும் அதிக வேலையில்லா பகுதிகளில் முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
கோல்ட் கார்டு:
புதிய முதலீட்டு வழி அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதி பற்றாக்குறையை நிரப்புவதற்காகவும், உயர் மதிப்புள்ள குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும், அதிபர் டிரம்ப் ‘கோல்ட் கார்டு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது EB-5 திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:தனிநபர் விண்ணப்பம்: அமெரிக்க வணிகத் துறைக்கு (Department of Commerce) குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலர் (சுமார் 8.4 கோடி ரூபாய்) ‘நிதி பரிசு’ (financial gift) அளிப்பவர்களுக்கு, விரைவான குடியேற்ற விசா (expedited immigrant visa) வழங்கப்படும். இது கிரீன் கார்டு வழியாக நிரந்தர குடியிருப்புக்கு வழிவகுக்கும்.
நிறுவனங்கள் சார்பில்: நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 2 மில்லியன் டாலர் (சுமார் 16.8 கோடி ரூபாய்) செலுத்தினால், ஒவ்வொரு ஊழியருக்கும் இதே வசதி கிடைக்கும்.
இந்த திட்டத்திற்கு கடந்த வெள்ளியன்று அன்று( செப்டம்பர் 19, 2025 ) அதிபர் டிரம்ப் நிர்வாக உத்தரவு (Executive Order) மூலம் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்தினார். இது 90 நாட்களுக்குள் அமலுக்கு வரும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வருவாய் பெற இயலும் என வணிகத் துறை செயலர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். முதலில் 80,000 கோல்ட் கார்டுகள் வழங்கப்படும், பின்னர் விரிவாக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் H-1B விசாவுக்கு ஆண்டுக்கு 100,000 டாலர் கூடுதல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள் இந்தியாவைச் சேர்ந்த IT தொழிலாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலரிடம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையை செல்வந்தர்களுக்கு சாதகமாக மாற்றும். பொதுவான இளைஞர்களின் வாய்ப்புகளை குறைக்கலாம். இந்தியா உள்ளிட்ட நாடுகளில், H-1B மற்றும் EB விசாக்களுக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இது புதிய சவால்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.