அமெரிக்காவில் பணியில் அமர்த்தப்படும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் H-1B விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
H-1B (எச்1 பி விசா ; ஹெச்1 பி விசா) கட்டணத்தை ரூ1.40 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்துவதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அதுவும் இந்த உத்தரவு இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வெளிநாடுகளுக்கு சென்ற தங்களது நிறுவனப் பணியாளர்கள் அனைவரையும் உடனேயே- 24 மணிநேரத்துக்குள் நாடு திரும்ப அமெரிக்கா நிறுவனங்கள் அதிரடியாக உத்தரவிட்டன. இதனால் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பதறியடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்புகின்றனர்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை சில விளக்கங்களை வெளியிட்டுள்ளது.
அதில்,
- புதியதாக H-1B விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள்தான் 1 லட்சம் அமெரிக்கா டாலரை (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) கட்டணமாக செலுத்த வேண்டும்
- தற்போது எச்1 பி விசா வைத்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் இந்த 1 லட்சம் அமெரிக்கா டாலர்கள் கட்டணத்தை செலுத்த தேவை இல்லை.
- அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் உடனடியாக நாடு திரும்ப தேவை இல்லை; அவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது
- H-1B விசாவைப் பெறும் போதுதான் இந்த 1 லட்சம் அமெரிக்கா டாலர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டுமே தவிர ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த விளக்கம், அமெரிக்கா நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவருக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
