கமலுடன் இணைந்து நடிக்க நல்ல கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்போம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என்ற கேள்விக்கு “நோ கமெண்ட்ஸ்” என தெரிவித்தார் ரஜினிகாந்த்.
கடந்த சில தினங்களுக்கு முன் விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், ரஜினியும் நானும் இணைந்து நடிக்க உள்ள தகவல் உண்மைதான் என்று தெரிவித்திருந்தார். இது ரஜினி, கமல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்டம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் கமலுடன் 10 படங்கள் வரை நடித்திருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் இருவரும் சேர்ந்து நடிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ” அடுத்தது ராஜ்கமல், ரெட்ஜெயன்ட் மூவிஸ் இரண்டும் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறேன். இன்னும் டைரக்டர் முடிவாகவில்லை. இரண்டு பேரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்போம்.
என்றார்.
மேலும் தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பாலக்காடு செல்கிறேன். 6 நாள் படப்பிடிப்பு நடைபெறுகின்றது. வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றார்.
மேலும் திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா? என்ற கேள்விக்கு “நோ கமெண்ட்ஸ்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஜினிகாந்த் தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதில், “மதிப்பிற்குரிய, பிரதமர் நரேந்திர மோடி ஜி, உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்புக்குரிய தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்.” குறிப்பிட்டுள்ளார்.