ஒசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காவில் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று கட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி 152 ஏக்கரில் உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கரையொட்டி உட்காருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களில் பல தரப்பினரும் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். பூங்காவில் பகல் நேரத்தில் பள்ளி மாணவ,மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்த நாள் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலை மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு பகல் முழுவதும் மூடப்பட்டது.
தற்போது மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரித்து வருகிறது. மேலும் பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதனிடையே பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என பேனர் கட்டப்பட்டிருந்தது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல் துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்து.
இந்த விவகாரகம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) காலை அவசர, அவசரமாக பேனர் அகற்றப்பட்டது.
இந்த பேனரை காவல் துறையினர் சார்பில் வைக்கவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பேனரை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.