தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக மாறி உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வெடி குண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 26) உயர் நீதிமன்றம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாயுடன் சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்திற்குள் இருந்து வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வெளியேறி உள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மற்றும் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வாயிலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு மிரட்டல் வந்தது. இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தனியார் கல்லூரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட உள்ளனர்.
