ஈரான் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஜூன் 22-ந் தேதி ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Iran PM Modi
ஈரானுடனான அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இடைவிடாமல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான், அணு ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் பேரழிவுதான் ஏற்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனிடையே ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஓமன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷஷ்கியனுடன் @drpezeshkian பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், நிலைமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உடனடியாக போரின் தீவிரத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி கடந்த வாரம் தொலைபேசியில் பேசியிருந்தார். இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தில் இஸ்ரேலை இந்தியா ஆதரிக்கவே கூடாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.