தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா நள்ளிரவில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியதால் நீக்கப்பட்டன.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் ஆதவ் அர்ஜூனா.
இந்த பின்னணியில் நள்ளிரவில் ஆதவ் அர்ஜூனா தமது எக்ஸ் பக்கத்தில், இளைஞர்கள் புரட்சி செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்க்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி.

எப்படி இலங்கையிலும் நேபாளத்திலும் இளைஞர்களும் Gen Z தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்துக்கு எதிராக புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்துக்கு முடிவுரையாகவும் இருக்கப் போகிறது” என தெரிவித்திருந்தார்.
பின்னர் இதில், “இலங்கை- நேபாளம்” ஆகியவற்றை நீக்கி பதிவிட்டார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமது எக்ஸ் பக்க பதிவையே ஆதவ் அர்ஜூனா நீக்கிவிட்டார்.
ஆனாலும் ஆதவ் அர்ஜூனாவின் சர்ச்சைக்குரிய- புரட்சியை தூண்டும் இந்த பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.