நடிகர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து கைது செய்யப்படலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) பிரசாரம் செய்தார். இந்த பிரசார கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குற்ற எண் 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் A1 குற்றவாளி மாவட்டச் செயலாளர் மதியழகன், A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,A3 நிர்மல் குமார் மற்றும் பலர் எனவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து தலைமறைவான மூவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது, த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
