தமிழக வெற்றிக் கழகத்தில் வழக்கறிஞர் அணியைத் தொடர்ந்து பனையூரில் இன்று தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விஜய் தலைமையிலான தவெகவின் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருப்பது தொண்டர் அணி இதுவரை அமைக்கப்படவில்லை. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் கட்சிக்குள் கூட்டங்களை ஒழுங்கு செய்வது தொடர்பான விவாதம் நடந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளாக முன்னாள் ஐஜி ரவிக்குமார், முன்னாள் டிஎஸ்பிக்கள் சிவலிங்கம், சஃபியுல்லா, முன்னாள் டிசி அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தவெகவின் தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆலோசனைப்படி தவெக தொண்டர் அணியினர் பொதுக் கூட்டங்களை ஒழுங்கு செய்வது, பொதுமக்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபவர்.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 பேர் வீதம் மொத்தம் 468 பேருடன் தொண்டர் அணி பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தவெகவின் தொண்டர் அணியானது மொத்தம் 2000 பேர் முதல் 2,500 பேரை கொண்டதாகவும் மகளிர் தொண்டர் அணியில் 1,500 பேர் வரை இடம் பெறவும் உள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
