கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், இன்றும் (நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது நாளாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர சம்பவத்திற்கான காரணங்களை கண்டறியவும், சம்பவத்துக்கு யார் காரணம் என்பதை அடையாளம் காணவும் சிபிஐயின் இந்த தீவிர நடவடிக்கைகள் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய் கலந்துகொண்ட கரூர் வேலுச்சாமிபுரம் கூட்டத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத துயரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதியை நிலைநாட்டவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழுவும், சிபிஐ விசாரணையை உன்னிப்பாகக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளது. மாநில போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை சிபிஐ மறுபதிவு செய்து, உள்ளூர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழு, கடந்த அக்டோபர் 17 முதல் கரூரில் முகாமிட்டுள்ளது. சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்தில், சிபிஐ அதிகாரிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 3D லேசர் ஸ்கேனர் கருவியைப் (Faro Focus) பயன்படுத்தி, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியின் நீளம், அகலம் மற்றும் அதன் புவியியல் அமைப்பை மிகத் துல்லியமாக அளந்து வரைபடமாக்கி வருகின்றனர். கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையின் முனியப்பன் கோயில் முதல் கோத்தூர் பிரிவுச் சாலை வரையிலான சுமார் 700 மீட்டர் தூரம், குறிப்பாக விஜய் வாகனம் நின்ற இடம் மற்றும் அவர் உரையாற்றிய இடம் ஆகியவை விரிவாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த அன்று அங்கு இருந்த கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வீடியோகிராபர்கள், சிசிடிவி ஆப்ரேட்டர்கள் என 10 முதல் 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், கூட்ட நெரிசலுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் வந்த நேரம், அழைப்பு விவரங்கள், உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளும் கோரப்பட்டுள்ளன.
சிபிஐ விசாரணையின் காரணமாக, குறிப்பாக 3D ஸ்கேனிங் கருவிகளைப் பயன்படுத்தி சாலைகளில் அளவீடுகள் எடுக்கப்படும்போது, கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படுகின்றன. தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சிபிஐ அதிகாரிகள் தங்கள் தற்காலிக முகாம் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைத்துள்ளனர். வழக்கில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்க்கவும், பிற பணிகளுக்காகவும் கரூர் பொதுப்பணித்துறை விருந்தினர் இல்லத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.
