கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஜனவரி 12-ந் தேதி ஆஜராகிறார்.
கரூர் துயரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், கரூர் தவெக மா.செ. மதியழகன், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர், கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து தனி விமானத்தில் இன்று டெல்லி செல்கிறார் விஜய்.
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர். டெல்லி விமான நிலையம் முதல் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
முன்னதாக சென்னையில் வழக்கறிஞர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, சிபிஐ விசாரணையில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள்- அதற்கான பதில்கள், விஜய்யிடம் சிபிஐ கேட்க வாய்ப்புள்ள கேள்விகள்- அதற்கான பதில்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.
