ஒரே ஹாலில் விசாரணை- மதிய உணவு.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன? முழு விவரம்

Published On:

| By Mathi

Delhi CBI Probe

41 பேரை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் ஒரே ஹாலில் அமர வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அனைவருக்கும் சிபிஐ அதிகாரிகள் மதிய உணவையும் வழங்கினர்.

தவெக தலைவர் விஜய் பிரசாரம் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

சம்மன் அனுப்பிய சிபிஐ

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் எஸ்பி உள்ளிட்ட அனைவரையும் நேற்று (டிசம்பர் 29) விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது சிபிஐ.

ADVERTISEMENT

சென்னையில் ஆலோசனை

இதனைத் தொடர்ந்து சென்னையில் உயர் அதிகாரிகளைச் சந்தித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, சிபிஐ கேட்க வாய்ப்புள்ள கேள்விகள்- அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டிய பதில்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

தவெக ‘டிஸ்கஷன்”

இதேபோல தவெக தரப்பிலும், சிபிஐ அதிகாரிகளிடம் என்ன என்ன விஷயங்களை சொல்ல வேண்டும்? என்ன ஆதாரங்களை கொடுக்க வேண்டும் எனவும் திட்டமிட்டிருந்தனர்.



ஒரே ஹாலில் நடந்த விசாரணை

இதையடுத்து நேற்று காலை டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளும் காவல்துறை அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராகினர்.

சிபிஐ தலைமை அலுவலகத்தில் அனைவரையும் ஒரே ஹாலில் அமர வைத்து முதலில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை காலை 10 மணிக்கு தொடங்கியது.

அருண்ராஜ் பேட்ச் மேட்

தவெக நிர்வாகியான முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜின் பேட்ச் மேட் அதிகாரி ஒருவர் சிபிஐ அதிகாரிகள் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

தவெக நிர்வாகிகள் சொன்னது என்ன?

தவெக தரப்பில் 43 பக்க ஆவணங்கள், சிபிஐ அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் குறித்து தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் விவரித்தார்.

அப்போது,

  • விஜய் பேசும் போது கூட்டத்தில் மயக்க மருந்தை சிலர் தெளித்துவிட்டனர்
  • உயிரிழந்த குழந்தையின் கண்கள் அதீதமாக சிவந்துள்ளது இதற்கு சாட்சி.
  • கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மர்ம நபர்கள் தாக்கி இருந்தனர். அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியால் கீறப்பட்ட காயம் இருக்கிறது.
  • இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பேர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
  • இந்த 11 பேரில் 6 பேர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன

என்று விவரித்துவிட்டு சில போட்டோக்கள், வீடியோக்களை சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

மேலும்,

  • பிரசார கூட்டத்துக்கு நாங்கள் வந்து கொண்டிருந்த போது ”பொறுமையாக வாங்க” என்று போலீசார்தான் கூறினர்.
  • நாங்கள் வேனை விட்டு இறங்கும் போது ”பொறுமையாக வாங்க” என எஸ்பிதான் சைகை காண்பித்தார்

எனவும் குறிப்பிட்டு வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ்களையும் தவெக நிர்வாகி நிர்மல்குமார் சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்தார்.

இதேபோல, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி பதில்களைப் பெற்றனர்.

அப்போது,

  • கரூர் துயரம் நிகழ்ந்த உடன் ஆட்சியர்தான், உடனடியாக கரூரை விட்டு புறப்பட சொன்னதாக தெரிவித்தனர்.

அதிகாரிகள் சொன்னது என்ன?

இதன் பின்னர் ஆட்சியர் தங்கவேலு, எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது

  • கரூர் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவுமே நடைபெறவில்லை.
  • வீடியோ பதிவுகளைப் பார்த்தாலே மயக்க மருந்து தெளித்தது, கத்தியால் கீறியது, சமூக விரோதிகள் பங்கேற்றது என்கிற சந்தேக புகார்களுக்கு ஆதாரமே இல்லை என்பது தெரிய வரும்.
  • தவெகவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் கற்பனையானவை.இது பற்றி தீவிரமாக விசாரித்தாலே உண்மை தெரிந்துவிடும்.
  • கரூர் சம்பவத்துக்கு காரணமே ‘அவங்க சொன்ன’ நேரத்துக்கு விஜய் வராமல் போனதுதான்.
  • கூட்டம் நடத்தும் போது அதற்கான ஏற்பாடுகளையும் தவெகவினர் முறையாகவும் செய்யவில்லை என விவரித்துவிட்டு வீடியோ பதிவுகள், அரசு- காவல்துறை ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டன.

சிபிஐ அதிகாரிகள் கேள்வி

சிபிஐ அதிகாரிகள் தரப்பில், போலீஸ் அதிகாரிகளின் செல்போன்களை ஏற்கனவே ஆய்வு செய்துவிட்டோம். எஸ்பியின் செல்போனில் இருந்து விஜய் தாமதமாக வரலாம் என வாய்ஸ் மெசேஜ் எதுவும் அனுப்பவில்லை என சுட்டிக்காட்டினர். ஆனால் அந்த வாய்ஸ் மெசேஜை அதிகாரிகள் அழித்துவிட்டதாக தவெகவினர் மீண்டும் குற்றம்சாட்டினர்.

இந்த விசாரணையின் போது சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு சில அதிகாரிகள் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர். அதனடிப்படையிலும் சில விளக்கங்கள், சிபிஐக்கு தரப்பட்டது.

மதிய உணவு ஏற்பாடு

இதன் பின்னர் அதே ஹாலில் அனைவருக்கும் சிபிஐ அதிகாரிகள் மதிய உணவு வழங்கினர். அப்போது சிலர் ரொட்டி மற்றும் பிரியாணி கேட்டனர். அனைத்தையும் அங்கே உள்ள கேண்டீனிலேயே சிபிஐ அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

தனித் தனியாக விசாரணை

மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது அதே ஹாலில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து பதில்களை பதிவு செய்தனர்.

9 மணி நேரம் விசாரணை

இந்த விசாரணை இரவு 6.45 மணி வரை நீடித்தது. சுமார் 9 மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில், 2-வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து 2-வது நாளாக இன்றும் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் ஆஜராகி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share