கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 62 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி, திண்டுக்கல் ஆட்சியர் கரூர் விரைந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரும் கரூர் செல்ல முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நிலைமை கவலைக்கிடமாகும் சூழலில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 7.30க்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் இரவே செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு 1 மணிக்கு முதல்வர் கரூர் செல்ல உள்ளார்.
இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் தற்போது திருச்சியில் இருந்து நேரடியாக தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் உயிரிழப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் விஜய் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னையில் விஜய்யை அழைத்து செல்ல வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கரூர் விரையும் சூழலில் தற்போது விஜய் சென்னை கிளம்பி உள்ளார்.
கரூர் கோர சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.