புதுச்சேரியில் டிசம்பர் 5-ந் தேதி தவெக தலைவர் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்புக்காக போலீஸ் அனுமதிக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
தவெக தலைவர் விஜய், அண்மையில் காஞ்சிபுரத்தில் ஜேப்பியார் கல்லூரியில் காஞ்சிபுரம் மக்களை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5-ந் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளார் விஜய். இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் செய்து வருகின்றனர்.
மேலும் புதுச்சேரி காலாப்பட்டு தொடங்கி கன்னியக்கோவில் வரையில் விஜய் ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புதுச்சேரி போலீசில் அனுமதி கோரி தவெகவினர் மனு கொடுத்தனர். ஆனால் போலீசார் தற்போது வரை அனுமதி தரவில்லை. புதுச்சேரிடி டிஜிபி அலுவலகத்துக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருந்தார். அங்கு உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் பெரும் ஏமாற்றத்துடன் புஸ்ஸி ஆனந்த் திரும்பினார்.
இதனால் புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்பு, ரோடு ஷோ ஆகியவற்றுக்கு போலீஸ் அனுமதி கிடைக்குமா? என தவித்து வருகின்றனர் தவெகவினர்.
கரூர் ரோடு ஷோவில் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து விஜய் நடத்தும் 2-வது தவெக நிகழ்ச்சி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
