ADVERTISEMENT

வயிறு எரிந்து சொல்கிறேன்… அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!

Published On:

| By Kavi

வயிறு எரிந்து சொல்கிறேன்… உன்னுடைய அரசியல் பயணம் முடிவடைந்துவிட்டது என்று அன்புமணி மீது கோபத்தை கொட்டியுள்ளார் ராமதாஸ்.

நெய்வேலியில் இன்று (நவம்பர் 29) கடலூர் மாவட்ட பாமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தேர்தல் ஆணையம் அன்புமணி தான் பாமக தலைவர் என்று கடிதம் அனுப்பியது தொடர்பாக தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிபடுத்தினார்.

“எவ்வளவு பெரிய மோசடி பாருங்க… பதவி முடிந்த பிறகு பதவி நீட்டிப்பாம். வியர்வை சிந்தி, 46 ஆண்டுகாலம் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று என் மக்களை சந்தித்து பேசி நம் சமூகத்தின் நிலைமையை கூறி வளர்த்த எனது கட்சியை முழுமையாக பறிக்க நினைக்கிறாய். அந்த உரிமையை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.

ADVERTISEMENT

நானே உருவாக்கிய கட்சி. மகன், மகள்கள் என்ற பெயரில் என் சொத்தில் உரிமை கொண்டாடலாம். ஆனால் கட்சியில் உரிமை கொண்டாட முடியாது. இந்த உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம். மேலும் உழைக்க தயாராக இருக்கிறேன்.

வருங்காலம் நல்ல எதிர்காலமாக இருக்கும். தர்மம் தான் வெல்லும். இந்த பாட்ஷா எல்லாம் இனிமே பலிக்காது.

ADVERTISEMENT

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், “இந்த சின்னத்துக்கு உரிமை கொண்டாட இவர் யார். இந்த கட்சிக்காக நான் ஒரு ஆளாக உழைத்தேன். இப்போது எல்லாம் என்னுடையதுதான் என்று சொன்னால் எப்படி முடியும்.

நடக்காது தம்பி நடக்காது. இன்னும் ஒரு மாதத்தில் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும், நீதிமன்றத்தை நம்பியிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் அநியாயம் நடந்திருக்கிறது” என தெரிவித்தார்.

பாமகவில் அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது என்றும், “இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன். என் உயிரை தவிர அவர் எல்லாவற்றையும் பறித்துவிட்டார்” என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share